தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதன்படி காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகல்  நேரத்தில் வெயில் அதிகமாக காணப்பட்ட நிலையில் மலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு திடீரென  2வது நாளாக இரவு  நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.



காஞ்சிபுரம் மற்றும் அதன்  சுற்று வட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம்,  சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பணிக்கு சென்று விட்டு  இரவு நேரத்தில் வீடுகளுக்கு திரும்பி வந்த தொழிலாளர்களும்,பொதுமக்களும், வாகன ஓட்டிகளும், மழையின் காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி வருவதால் பெரும் அவதிப்பட்டனர். இருப்பினும் பகல் நேர வெப்பத்தின் தாக்கம் கனமழையின் காரணமாக தணிந்து குளிர்ச்சி யான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளும் கனமழை, பெய்து வருகிறது.






 

வானிலை அறிக்கை சொல்வதென்ன

 

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேற்கு திசை காற்றின் வேகத்தில் ஏற்பட்டுள்ள மாறுபாட்டால் தமிழகத்தில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை தொடர்ந்து 3 நாட்களுக்கு நீடிக்கும். தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (1ம் தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.



 

நாளை மறுநாள் (2ம் தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக காவேரிப்பாக்கத்தில் 6 செ.மீ., திருத்தணியில் 5 செ.மீ., வால்பாறையில் 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. குளச்சலில் கடல் சீற்றம் ஏற்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.