நீதிமன்ற வளாகத்தில் முதியவர் ஒருவர் ரெளடிகளை கொல்ல கத்தியுடன் பாய்ந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை உண்டாக்கியது.
சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள அல்லிக்குளம் 20தாவது கூடுதல் நீதிமன்றம் நேற்று முன் தினம் வழக்கம்போல் பரபரத்து காணப்பட்டது. போலீசாரும், வழக்கறிஞர்களும் பொதுமக்களும் நீதிமன்ற வளாகத்தில் வழக்கமான பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஆயுதப்படை போலீசார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி ஒருவனை புழல் சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்து வந்துள்ளனர்.அதேபோல நீதிமன்ற வளாகத்தில் இருந்த போலீசார் வாகனத்தில் மற்றொரு குற்றவாளியும் இருந்துள்ளார். இருவரையும் பாதுகாப்பாக வாகனத்தில் இருந்து இறக்கிய போலீசார் தரைத்தளத்தில் இருந்து 2வது தளத்தில் இருக்கும் நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றனர்.
முதியவர்..
போலீசார் பாதுகாப்பில் இரு குற்றவாளிகளும் சென்றுகொன்றுகொண்டிருந்த போது கூட்டத்தில் இருந்து கூக்குரலிட்டப்படி ஒரு முதியவர் குற்றவாளிகளை நோக்கி பாய்ந்து வந்துள்ளார். என் மகனை கொலை செய்த உங்களை விட மாட்டேன் என கூறியபடி ஒரு அடி நீள கத்தியுடன் வேகமாக வந்துள்ளார் முதியவர். என்ன நடக்குது என்பதை பார்த்து சுதாரித்துக்கொண்ட போலீசார் முதியவரை அலேக்காக பிடித்து கையில் இருந்த கத்தியையும் பிடுங்கினர்.
யார் அவர்?
விசாரணையில் கைது செய்யப்பட்ட நபர் சூளைமேடு பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்த உதயகனி (60) என்றும், அவரது மகன் ஆண்டனியை 2020ல் ரவுடிகள் ஐயப்பனும், கார்த்திக்கும் கொலை செய்துள்ளனர். அதற்கு பின் கொலைக்குற்றத்துக்காக அவர்கள் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மகனைக் கொலை செய்த ரவுடிகள் மீது கோபத்திலேயே இருந்த உதயகனி பழிவாங்க திட்டமிட்டுள்ளார். அதன்படி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு ரெளடிகள் வருவதை அறிந்த முதியவர் கையில் கத்தியுடன் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.
வழக்குப்பதிவு.!
நீதிமன்ற வளாகத்திலேயே ஒரு நீள கத்தியுடன் ரெளடிகளை கொலை செய்ய முயன்ற முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிமன்ற வளாகத்திலேயே கொலை முயற்சி என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்