காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதூர் மாசிய விரதம் முடித்து விஸ்வரூப யாத்திரை நடைபெற்றது. காஞ்சிபுரம் ஓரிக்கை மணி மண்டபத்திலிருந்து புறப்பட்டு காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்.
காஞ்சிபுரம் சங்கர மடம்
காஞ்சி காமகோடி பீடம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் சங்கர மடம் , இந்திய அளவில் புகழ்பெற்ற மடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. காஞ்சிபுரம் சங்கரமடம் , ஆதிசங்கரால் நிறுவப்பட்டது என நம்பப்படுகிறது. காஞ்சி காமகோட்டி பீடத்தின் 70- வது சங்கராச்சாரியாராக விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். அரசியல் ரீதியாக செல்வாக்கு பெற்ற மடமாகவும் காஞ்சிபுரம் சங்கரமடம் உள்ளது. தமிழ்நாடு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் என பல தரப்பட்ட அரசியல் ஆளுமைகள் சங்கர மடம் வந்து சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
சாதூர் மாசிய விரதம்
காஞ்சி காமகோடி பீடம் என அழைக்கப்படும் காஞ்சி சங்கர மடத்தின் 70 ஆவது பீடாதிபதியான காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயந்திர சரஸ்வதி சுவாமிகள் குரோதி வருட சாதூர் மாசிய விரதத்தை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 18 தேதியான நேற்று வரை சுமார் இரண்டு மாதங்கள் விரதம் மேற்கொண்டார். காஞ்சிபுரம் பாலாற்றின் கரை அருகே உள்ள ஓரிக்கை மணிவண்டபத்தில் தங்கி இருந்து சாதூர் மாசிய விரதம் மேற்கொண்டார்.
விஸ்வரூப யாத்திரை
நேற்று விரதம் முடிந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விஸ்வரூப யாத்திரை மேற்கொண்டார். விஸ்வரூப யாத்திரியை ஒட்டி மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்தருளினார். காஞ்சிபுரம் ஓரிக்கை மணிமண்டபத்தில் இருந்து, மேளதாளங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் பாடி வர ஊர்வலமாக, சிலம்பாட்டம் ,தப்பாட்டம் ,மயிலாட்டம், கரகாட்டம் ,கட்டைக்கூத்து, பஜனைகள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை கலைஞர்கள் ஆடி வர காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகளான காஞ்சிபுரம் உத்திரமேரூர் நெடுஞ்சாலை, கீரை மண்டபம், மேட்டு தெரு, வள்ளல் பச்சையப்பன் தெரு, காமராஜர் வீதி,நெல்லு கார தெரு, மேற்கு ராஜவீதி, வழியாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு விஸ்வரூப யாத்திரை பக்தர்களுக்கு அருள் பாலித்தவாறு வருகை தந்தார்.
உற்சாக வரவேற்பு
யாத்திரையாக வருகை தந்த காஞ்சி சங்கராச்சாரியாருக்கு வழியெங்கும் நகரின் முக்கிய பிரமுகர்களும், பல்வேறு இந்து அமைப்பினரும், வியாபாரம் பெருமக்களும்,மாலை மரியாதைகள், மலர் கீரிடங்கள், பழ வகைகள் உள்ளிட்டவற்றை சமர்ப்பித்து பிரம்மாண்ட வரவேற்பு அளித்து காஞ்சி சங்கராச்சாரியாரை வரவேற்று வணங்கி வழிபட்டனர்.
வழியெங்கும் கூடியிருந்த பக்தர்களுக்கு காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசிகளை வழங்கியபடி விஸ்வரூப யாத்திரை செய்து காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நிறைவு செய்தார். காஞ்சி சங்கராச்சாரியாரின் விஸ்வரூப யாத்திரையை ஒட்டி காஞ்சிபுரம் நகரம் முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது. விஸ்வரூப யாத்திரை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குவிந்திருந்ததால் காஞ்சிபுரம் நகரமே பரபரப்புடன் காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.