காஞ்சிபுரத்தில் இரண்டு மணி நேரத்துக்கு 6 சென்டிமீட்டர் வெளுத்து வாங்கிய கனமழை.  முக்கிய சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

 

காஞ்சிபுரத்தில் கனமழை

 





காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : தமிழக முழுவதும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று  மாலை நேரங்களில் காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை பெய்து கொட்டியது.

 

மழை நீர் கழிவு நீருடன்..

 

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் 2 மணி நேரத்தில் 6 செ.மீ மழை வெளுத்து வாங்கியது. வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் 2 செ.மீ மழையும், ஶ்ரீபெரும்புதூரில் ஒரு செ.மீ மழை பதிவாகி உள்ளது. 2 மணி நேரத்துக்கு பெய்த கனமழையால் காஞ்சிபுரம் மாநகராட்சி முக்கிய சாலையான காந்தி சாலை, மேட்டு தெரு, இந்திரா காந்தி சாலை, மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலைகளில் மழை நீர் கழிவு நீருடன் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. சாலை ஓரமாக மழைநீர் கால்வாய் இருந்தும் தண்ணீர் செல்லாமல் சாலையிலேயே தேங்கி வடிவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.  இதேபோன்று சென்னை புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது


 

 




 காஞ்சிபுரத்தில் பெய்த மழையின் அளவு ?


நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பெய்த மழை அளவு ?



  காஞ்சிபுரம்  63. 40 மில்லி மீட்டர் மழை



  வாலாஜாபாத் பகுதியில் 25 .40 மில்லி மீட்டர்



  ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 16.40 மில்லி மீட்டர் 



 குன்றத்தூர் பகுதியில் 22 மில்லி மீட்டர்



  செம்பரம்பாக்கத்தில் 6.80 மில்லி மீட்டர்



  இரண்டு மணி நேரத்தில்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் 134 மில்லி மீட்டர் மழை பதிவானது


  இரவு 8 மணி முதல் 10 மணி வரை பெய்த மழை அளவு


  காஞ்சிபுரம் பகுதியில் ஒரு மில்லி மீட்டர்



  உத்தரமேலூரில் 2 மில்லி மீட்டர்


  வாலாஜாபாத்தில் 2.80 மில்லி மீட்டர் 



  ஸ்ரீபெரும்புதூரில் 8 மில்லி மீட்டர்  மழை பதிவானது


தமிழகத்தில் மழை


24.09.2023 மற்றும் 25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 

26.09.2023 மற்றும் 27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.