காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழையின் காரணமாக பல்வேறு ஏரிகள் குளங்கள் நிரம்பி வருகிறது.  அந்த நிலையில் பாலாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் செல்லும் தரைப்பாலம் முற்றிலுமாக வாகன போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. தரை பாலத்தை தாண்டி 20 ஆயிரம் கனஅடி  நீர் செல்வதால் வாலாஜாபாத்தில் இருந்து அவலூர் மற்றும் அங்கம்பாக்கம், கம்பராஜபுரம், தம்மனூர், இளையனர் வேலூர், காவாந்தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.



 

மேலும்  தொழிற்சாலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் 15 கிலோமீட்டர் சுற்றி தான் செல்ல வேண்டும் அல்லது திருமுக்கூடல் வழியாகத்தான் செல்ல வேண்டும் மற்றும் வாலாஜாபாத் - அவலூர் தரைப்பாலத்தில் வெள்ள நீர் சென்று கொண்டிருப்பதால் சுற்றியுள்ள 12 பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

 



 

 


 

மழை நிலவரம்

 

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் தொடங்கியது மழை. வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் இரு தினங்களாக மழை ஓய்ந்திருந்தது.

 




 

இந்நிலையில் நேற்று காலை முதல் மேக மூட்டம் இருந்த நிலையில் திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, பேருந்து நிலையம், சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார் சத்திரம், ஶ்ரீ பெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 54.84 மில்லி மீட்டர் மழையும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 38 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.