மீண்டும் ஃபார்ம் திரும்பிய ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, முதன் முறையாக ஐசிசி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. ஆஸ்திரேலியா ஃபார்மிற்கு திரும்பியதோ இல்லையோ... அந்த அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் ஃபார்மிற்கு திரும்பியது தான், அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம். நடந்து முடிந்த ஐசிசி டி20 உலகக்கோப்பையின் அனைத்து போட்டிகளிலும் டேவிட் வார்னர் பங்களிப்பு அந்த அணியின் உலகக் கோப்பை கனவை நினைவாக்கியது.


குறிப்பாக கடைசியில் நடந்த அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் ருத்ரதாண்டவம் ஆடினார் டேவிட் வார்னர். இதனால் தொடர் நாயகன் விருதையும் அவர் தட்டிச் சென்றார். டேவிட் வார்னரின் இந்த ஆட்டம், ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. அதற்கு காரணமும் உண்டு. 


அக்டோபரில் அதே அமீரகத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர். ‛அவுட் ஆப் ஃபார்ம்’ எனக்கூறி அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். இது ஐபிஎல் ரசிகர்கள் மட்டுமின்றி, ஆஸ்திரேலிய ரசிகர்களை கவலையடைச் செய்தது. ஒரு முன்னணி அணியின் துவக்க வீரரை, ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டியில், ஃபார்ம் இல்லை எனக்கூறி உட்காரச் செய்ததை பலரும் பலவிதமாக விமர்சித்தனர்.




ஏன்... ஒரு கட்டத்தில் வர்னரே... மனமுடைந்து, அடுத்த ஐபிஎல் ஏலம் எப்போது வரும் என காத்திருப்பதாக கூறினார். அந்த அளவிற்கு அவரது ஃபார்ம் விமர்சிக்கப்பட்டது. அக்டோபரில் இந்த நிலை: நவம்பரில் ஐசிசி டி20 உலகக்கோப்பை. அதே அமீரகத்தில் தான். ஆஸ்திரேலிய அணிக்காக துவக்க வீரராக களமிறங்கிய டேவிட் வார்னர், 14, 65, 1, 18, 89, 49, 53 என தனது பங்களிப்பாக இத்தொடரில் 236 ரன்கள் குவித்தார். மூன்று அரை சதங்கள், ஒரு ரன்னில் தவற விடப்பட்ட ஒரு அரை சதம், என அவரது ஆட்டம் ருத்ரதாண்டவமாக இருந்தது. 


ஆஸ்திரேலியாவின் கடைசி மூன்று முக்கிய ஆட்டங்களிலும் ஆஸ்திரேலியாவை பைனலுக்கு அழைத்து வந்து அணியை வெற்றி பெறச் செய்தது வரை வார்னருக்கு முழு பங்கு இருந்ததை அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஐசிசியும் அதை அங்கீகரித்து தொடர் நாயகன் விருதை வழங்கிவிட்டது. இதுவரை எல்லாம் ஓகே. இந்த நொடிக்காக தான் காத்திருந்தார், வார்னரின் மனைவி கேண்டீஸ் வார்னர். 






 


‛Out of form, too old and slow!’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கேண்டீஸ் வார்னர், தன்னுடைய வாழ்த்துக்களை தன் கணவருக்கு தெரிவித்துள்ளார். டேவிட் வார்னருக்கு எதிரான அவுட் ஆப் ஃபார்ம் விமர்சனம், அவரது குடும்பத்தில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதையும், அதற்கு பதிலடியாக தான் அவரது மனைவி இந்த பதிவை போட்டுள்ளார் என்பதும் தெரிகிறது. வார்னருக்கு எதிராக பேசிய அனைவருக்கும் ஒரு ட்விட்டில் பதிலடி கொடுத்துள்ளார் வார்னரின் மனைவி. 


வார்னர் மனைவியின் இந்த பதிவை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். 


‛என்னை யாரும் தேடாதீங்க...’ சியர்ஸ்... சொல்லி புறப்பட்ட மேக்ஸ்வெல்!


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண