காஞ்சிபுரம் அருகே 200 கிலோ கஞ்சா மூட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் வழக்கு தொடர்பாக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 3 பேர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


போதைப் பொருள் புழக்கம் 


தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம், விற்பனை உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி , பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை எடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனையை கட்டுக்குள் கொண்டு வர தமிழ்நாடு அரசு மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும், ஆந்திரா உயர்த்த மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்திவரப்பட்டு, விற்பனை செய்வது, பயன்படுத்துவது போன்ற குற்றச் செயல்கள் அவ்வப்போது நடப்பதும், அதில் போலீசார் நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.


குறிப்பாக சென்னை புறநகர் மாவட்டங்களாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சிறு சிறு கஞ்சா வியாபாரிகளை கைது செய்வதை காட்டிலும், பிரதான கஞ்சா வியாபாரிகளை கைது செய்ய போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளில் மேற்கொண்டு வருகின்றனர். 


போலீசார் தீவிர சோதனை


திருவள்ளூர் மாவட்டம் ஏலாயினூர் சோதனைச்சாவடி பகுதியில் காஞ்சிபுரம் நுண்ணறிவு போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஆந்திரா பதிவு எண் கொண்ட சந்தேகத்திற்கு இடமான, வாகனத்தை போலீசார் மடக்கி ஆய்வு மேற்கொண்டனர். வாகனத்தை ஓட்டி வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்ததால், சந்தேகம் அடைந்து வாகனத்தை போலீசார் சோதனை செய்தனர். 


வாகனத்தை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது, அதிர்ச்சி அடைந்தனர். வாகனத்தில் மூட்டை மூட்டையாக கஞ்சா இருப்பதை பார்த்து, போதை நுண்ணறிவு பிரிவு போலீசார் உடனடியாக வாகனத்தை இயக்கி வந்த நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 


போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ஆந்திர பிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜு என்கிற மோகன்ராஜ் என்பவர் இந்த கஞ்சா மூட்டைகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. இவர் மேலும் இவர் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த சண்முகநாத பிரபு மற்றும் பாலமுருகன் ஆகிய இருவருடன் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னையில் கைமாற்றி விட்டு வந்தது தெரிய வந்தது. மேலும் இவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் சேர்ந்த செந்தில்நாதன் என்பவர் இவர்களுக்கு உதவி செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 


ஆம்னி பேருந்து ஓட்டுநர்


ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் ஆம்னி பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். நெல்லூரிலிருந்து சென்னை வரை தனியார் ஆம்னி பேருந்துகளை இயக்கி வந்துள்ளார். அவ்வாறு ஆம்னி ஓட்டுனராக பணியாற்றி வந்த போது, அவரிடம் ஆம்னி பேருந்து மூலம் குறிப்பிட்ட நபர் பார்சல்களை கொடுத்து, சென்னையில் டெலிவரி செய்யுமாறு கொடுத்து வந்துள்ளார். மோகன்ராஜ் அவர் பார்சல்களை டெலிவரி செய்துவிட்டு, குறிப்பிட்ட தொகையை பெற்று வந்துள்ளார். 


அவ்வப்போது ஆம்னி பேருந்தில் தொடர்ந்து பார்சல்கள் அனுப்பி வருவதால் மோகன்ராஜுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மோகன்ராஜ் இந்த பார்சல் குறித்து விசாரித்தபோது, நூதன முறையில் கஞ்சாவை கடத்தி வந்தது மோகன்ராஜ் க்கு தெரிய வந்தது. கஞ்சா கடத்தினால் நல்ல வருமானம் கிடைக்கும் என எண்ணிய மோகன்ராஜ், தானும் சேர்ந்து கஞ்சா கடத்த முயற்சி மேற்கொண்டுள்ளார். 


200 கிலோ கஞ்சா பறிமுதல் 


இதனை அடுத்து ஆந்திராவில் தனது சகோதரர்கள் உதவியுடன் கஞ்சா விலைக்கு விலைக்கு வாங்கி, சென்னையில் கஞ்சா விற்பனையை மேற்கொண்டு வந்துள்ளார் என காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆரம்பத்தில் ஆம்னி பேருந்து ஓட்டுனராகவே கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதன் பிறகு வாகன மூலம் கிலோ கணக்கு கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரணையில் தெரியவந்துள்ளது.‌ இதனை அடுத்து நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.