காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை சின்னையங்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கிருபாகரன், கிருபானந்தன். இவர்கள் இருவரும் சிவ வழிபாட்டில் தீவிரமாக இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். காஞ்சிபுரத்தில் உள்ள ஆண்டர்சன் மேல்நிலைப் பள்ளியில் 10-ம்வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்தவாறு பள்ளிக்கு வந்துள்ளனர். ருத்ராட்சம் அணியக் கூடாது என்று தடுத்த ஆசிரியர் ஒருவர், அந்த மாணவர்களை அடித்ததாகவும், மற்ற மாணவர்களை விட்டு தலையில் கொட்டச் செய்ததாகவும், பெற்றோரை பள்ளிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவே அச்சப்படுவதாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் புகார் எழுத்துள்ளது.
இந்தப் புகாரை அவர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனுவாக அனுப்பியதுடன், மனித உரிமை ஆணையம், கல்வி அமைச்சர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், காஞ்சிபுரம் முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோருக்கும் நகல்களை அனுப்பியுள்ளனர். அந்தப் புகாரில், 'பொறுக்கி ரவுடிதான் ருத்ராட்சம் அணிவான். திருநீர் அணியக் கூடாது' என்று கூறி வகுப்பறைக்குள் நுழைய விடாமல் மாணவர்களை தடுத்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் சிலரிடம் கேட்டபோது, "மாணவர்கள் கழுத்தில் மணி, காதில் கடுக்கன் போன்றவற்றை அணிந்து வந்தால், அதை வெளியிலேயே கழட்டச் சொல்வது வழக்கம். கோயிலுக்குச் செல்வதற்கு மாலை அணிவித்து வரும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர் ஒப்புதலுடன் அணிந்தால் பள்ளியில் அனுமதி உண்டு. கடந்த 175 ஆண்டுகளாக காஞ்சிபுரத்தில் இந்தப் பள்ளி இயங்கி வருகிறது.
இதுவரை இந்தப் பள்ளியின் மீது மதரீதியான குற்றசாட்டு எழுந்ததில்லை. மாணவர்கள் மணி அணிந்து வந்தால் கழற்றச் சொல்வதுபோல் ருத்ராட்சத்தை ஆசிரியர் கழற்றச் சொல்லிவிட்டார். இது தொடர்பாக அவர்களின் பெற்றோர் வந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் சில ஆசிரியர்கள் பேசி சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டனர். இப்போது பிரச்சினை பெரிதாகிவிட்டது. ஒரு சிலரின் செயலால் ஒட்டுமொத்த பள்ளியையும் குறைகூற வேண்டாம் என்று அவர்களின் பெற்றோரிடம் பேசியுள்ளோம்" என்றனர்.
பள்ளியில் தாளாளர் சச்சிதானந்தத்திடம் கேட்டபோது, "பள்ளியின்கமிட்டி கூடி, இது தொடர்பாக விசாரித்துள்ளது. எங்கள் தலைமைக்கு தகவல் தெரிவித்துவிட்டேன். சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுத்துள்ளோம். பெற்றோர் கூறும் புகாரில்உண்மை இருந்தால் அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வத்திடம் கேட்டபோது, "எங்களுக்கு வாட்ஸ்-ஆப் மூலம் இந்த புகார் வந்துள்ளது. தற்போது விடுமுறை நாள் என்பதால் உடனடியாக விசாரணை நடத்த முடியவில்லை. பல ஆண்டுகளாக இயங்கி வரும் பாரம்பரியம் மிக்க பள்ளியில் இதுபோன்றபுகார் வந்திருக்கக் கூடாது. இதுதொடர்பாக வரும் அக். 18-ம் தேதி விசாரிக்க உள்ளோம்" என்றார்.