வடகிழக்கு பருவமழை
வடகிழக்கு பருவ மழை இன்று துவங்க உள்ள நிலையில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர் திருவாரூர், அரியலூர் உட்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு, கேரளா உள்பட தென் இந்திய பகுதிகளில் இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்புள்ளது என்றும், தமிழகத்தை பொறுத்தவரையில் இயல்பையொட்டியே பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு மையத்தின்தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு
காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதேபோல் செங்கல்பட்டு பகுதியில் திடீர் கனமழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாகவே செங்கல்பட்டு பகுதியில் , வானம் மேகமூட்டமாக காணப்பட்டு வந்தது. நேற்று மாலை சிறிதளவு செங்கல்பட்டு நகர் பகுதியில் ஆங்காங்கே தூரல் பெய்த நிலையில், இன்று காலையும் தொடர்ந்து மேகமூட்டத்துடன் நகர் பகுதி இருளாக காட்சியளித்தது.
இன்று காலை 10:30 மணி அளவில் திடீரென கனமழை செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்தது. செங்கல்பட்டு நகரம், புலிப்பாக்கம், வேம்பாக்கம், ராட்டின கிணறு, மாவட்ட ஆட்சியர் வளாகம், பழவேலி, பரணுர் சுங்கச்சாவடி, சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. எதிர்பாராமல் , காலை மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் அலுவலகத்திற்கு செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்