காஞ்சிபுரத்தில் மதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் வளையாபதி மற்றும் பிரபு ஆகியோர் மீது போலீஸ் சித்திரவதை செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு 


 


 


ஒய்வு பெற்றபெண் ஆய்வாளர் கொலை 


 


 


காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காலண்டர் தெருவில் வசித்து வந்த, முன்னாள் பெண் காவல் ஆய்வாளர் கஸ்தூரி என்பவர் கடந்த இந்த மாதம் 22 தேதியன்று அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இது தொடர்பான வழக்கில், கஸ்தூரி கொலை செய்யப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர். 


 




இந்த வழக்கு தொடர்பாக மதிமுக கட்சியின் காஞ்சிபுரம் முன்னாள் மாவட்ட செயலாளர் வளையாபதி மற்றும் அதிமுக பிரமுக பிரபு ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். வளையாபதி தற்போது வேலூர் மத்திய சிறையில் , நீதிமன்ற காவலில் இருந்து வருகிறார். பிரபு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌ 


 


 


கள ஆய்வு அறிக்கை


 


 


இந்தநிலையில் வளையாபதி மற்றும் பிரபு ஆகியோர் காவல்துறை விசாரணையின் பொழுது சித்திரவதை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டை முன்வைத்து உள்ளனர். இது தொடர்பாக காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் இது தொடர்பாக கள ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பான கள ஆய்வு அறிக்கை காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வெளியிடப்பட்டது. 




கள ஆய்வு அறிக்கை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்கள் கண்காணிப்பாக்கம் நிர்வாக இயக்குனர் ஹென்றி திபேன் பேசுகையில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கஸ்தூரி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர வேண்டும், சிபிசிஐடி சிறப்பு பிரிவு போலீசுக்கு கஸ்தூரி வழக்கை மாற்ற வேண்டும் ‌. காஞ்சிபுரம் நத்தப்பேட்டை பகுதியில் பயன்பாட்டில் இல்லாத காவலர் குடியிருப்பில் உள்ள கட்டிடத்தில் வைத்து வளையாபதி போலீசார் சித்தரவதை செய்துள்ளனர். எனவே அந்த இடத்தை மனித உரிமை ஆணையம் சீல் வைக்க வேண்டும். ஸ்ரீபெரும்புதூர் ஏஎஸ்பி உதயகுமார் ஐபிஎஸ் , ஏ.டி.எஸ்.பி சார்லஸ் சாமுவேல் துரைராஜ், டிஎஸ்பி மணிமேகலை மற்றும் காவல் ஆய்வாளர் ஜெயவேல் ஆகியோர் இணைந்து வளையாபதி மற்றும் பிரபு ஆகிய இருவரையும் சித்திரவதை செய்துள்ளனர். 


 


 


 


காவல்துறை மீது நடவடிக்கை


 


 


காஞ்சிபுரத்தில் மிக கொடூரமான காவல் சித்திரவதை சம்பவம் நடைபெற்று இருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் இந்த கள ஆய்வு தொடர்பாக சந்தித்து சென்றால், சந்திப்பை மறுக்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் நேரடி கவனத்தில் எடுத்துக்கொண்டு, உதயகுமார் ஏ.எஸ்.பி மற்றும் டிஎஸ்பி மணிமேகலை உள்ளிட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட வேண்டும்.  


 




 


காவல்துறையிடம் இணைந்து முதலமைச்சரும் கூட்டு சதியில் ஈடுபடுகிறார் என்ற நிலை வந்து விடக்கூடாது. வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது நடைபெற்ற சித்திரவதை விட அதிக அளவு சித்தரவதை இவர்களுக்கு நடைபெற்றிருக்கிறது. திமுக அரசில் இது போன்ற கொடூர நடந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார் ‌. கள ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.