யார் கெத்து - ஆபத்தான முறையில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள்
சென்னை அருகே பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-12ம் வகுப்பு வரை உள்ளது. இதில் 1000 - க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பகுதியில் குட்டி பச்சையப்பன் காலேஜ் என்னும் தோனியில் வலம் வரும் மாணவர்கள் பேருந்து மேற்கூரை மீது ஏறுவது , ரூட்டு தல உள்ளிட்ட பல்வேறு செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இன்ஸ்ட்டா கிராம் , பேஸ்புக் லைக் மோகம்
இன்ஸ்டா கிராம் , பேஸ்புக் லைக் மோகத்தில் பல்வேறு சேட்டைகள் செய்து அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த நிலையில் மாலை நேரத்தில் பூவிருந்தவல்லி - தாம்பரம் செல்லும் அரசு பேருந்தை பூந்தமல்லி ரெடி பாஸ்கெட் அருகே வழி மறித்து மேற்கூரையின் மீது ஏறி ரீல்ஸ் எடுத்து அட்டகாசம் செய்துள்ளனர். நடுவழியில் பேருந்தை மடக்கி மேற்கூரையில் ஏறியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
பள்ளி மாணவர்கள் ரகளை
பூவிருந்தவல்லி அறிஞர் அண்ணா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அரசு பேருந்துகளில் அடிக்கடி ரகளையில் ஈடுபடுவதாக தொடர் புகார் எழும் நிலையில் , காவல்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களின் செயலை கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேருந்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டு ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பூந்தமல்லியில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் இதனை கண்டும் காணாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓடும் பேருந்தின் ஜன்னலில் தொங்கி அட்டகாசம்
தொடர்ந்து , இந்த பகுதியில் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்து வழிமறித்து பேருந்தின் மேற்கூறை மீது அமர்வதும் ஜன்னலை பிடித்து தொங்கிக்கொண்டு செல்வதும் போன்ற பொதுமக்களை முகம் சுளிக்கும் செயல்களிலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவது அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது பூந்தமல்லி போலீசார் தொடர்ந்து இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.