காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் தாலுக்கா, பெருநகர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வரதன் (70). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வேலை செய்ய சென்ற இடத்தில் மின்சார மோட்டார் பெல்ட் அறுந்து கால் தொடையில் அடித்ததில்  பலத்தகாயம் ஏற்பட்டு உள்ளது.



 

காயத்திற்கு பல்வேறு இடங்களில் 2 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் காயம் ஆறாமல் சீழ் வடிந்து உள்ளது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளார். காலில் கடுமையான காயத்துடன் சிகிச்சை பெற வந்த வரதனை அரசு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்து மருத்துவமனையில் அனுமதித்து, எக்ஸ்ரே, ஸ்கேன்,உள்ளிட்ட பரிசோதனைகளை செய்து உள்ளனர். இந்நிலையில் எக்ஸ்ரே, ஸ்கேன், பரிசோதனையில் வரதன் கால் தொடையில் எலும்புக்கு இடையில் ஏதோ இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



 

இதை தொடர்ந்து அரசு மருத்துவமனை எலும்பு பிரிவு சிறப்பு மருத்துவர்கள் குழுவினர் கூலித் தொழிலாளியான வரதனுக்கு கால் தொடையில் நரம்புகள், தசைகள், சேதம் ஏற்படாதவாறு நவீன கருவி உதவியுடன் அறுவை சிகிச்சை செய்து 10 சென்டிமீட்டர் நீளமுள்ள இரும்புத் துண்டை வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இருந்த இரும்புத்துண்டை கண்டுபிடித்து அகற்றியதால் தொழிலாளி வரதன் உடல்நலம் தேறி வருகிறார்.



 

இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழுவில் மருத்துவர் மனோஜ் கூறுகையில், வரதன் என்பவர் நீண்ட காலமாக காலில் புண் இருந்து வருகிறது என மருத்துவமனைக்கு வந்தார். முதலில் அவருக்கு சுகர் இருக்கிறதா என பரிசோதனை செய்தோம் ஆனால் சர்க்கரை அளவு சரியாக இருந்தது. சர்க்கரை அளவு சரியாக இருந்ததால் உள்ளே வேறு ஏதாவது மர்ம பொருள் இருக்கலாம் என சந்தேகித்தோம். இதனை அடுத்து அவருடைய கால் எக்ஸ்-ரே மூலம் பரிசோதனை செய்து பார்த்தோம். அப்பொழுது சுமார் 10 சென்டி மீட்டர் நீளமுடைய மர்ம பொருள் இருப்பது தெரியவந்தது.



 

இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்றுவதற்காக முடிவு செய்தோம் . மருத்துவ குழுவினர் முறையாக தயார் செய்து கொண்டு அறுவை சிகிச்சை மூலம் அந்த இரும்பு  பொருளை அகற்றியுள்ளோம். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவருக்கு ஒரு விபத்து நடந்துள்ளது. பணிபுரிந்த இடத்தில் நடைபெற்ற விபத்தில் காலில் இந்த மர்ம பொருள் சிக்கி உள்ளது . அதை தற்போது நாங்கள் அகற்றியுள்ளோம் அவர் தற்போது நலமாக உள்ளார் என தெரிவித்தார்.