காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் உள்ளது சாலவாக்கம் கிராமம் இக்கிராம காடுகளுக்கு அருகில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை தீட்ட பயன்படுத்திய இடங்களை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் கொற்றவை ஆதன் மற்றும் குழுவினர் கண்டறிந்துள்ளார்கள்.
இதுகுறித்து உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறுகையில், அன்பில்பிரியன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் விஜயகுமார் மற்றும் தாஜூதீன் அகமது ஆகியோருடன் இணைந்து எடமிச்சி காட்டுப் பகுதிக்கு அருகில் உள்ள அமரக்கல் குன்று மற்றும் இரண்டு பாறைகளை கள ஆய்வு செய்தோம். இந்த புதிய கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை பட்டை தீட்டிய வழவழப்பான கற்குழிகளை கண்டறிந்தோம். புதிய கற்காலம் என்பது வேட்டை சமூகமாக இருந்த ஆதி மனிதர்கள் தட்ப வெப்ப சூழலாலும் உணவை தேடியும் நாடோடிகளாக ஓடி திரிவது முடிந்து ஓர் இனக் குழுவாக ஓரிடத்தில் தங்கி வாழ்வை தொடங்கிய காலம் எனக் கொள்ளலாம் கிமு 3000 த்திலிருந்து கிமு 10000 வரை இதன் காலம் இருக்கலாம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
அவ்வாறு வாழ்ந்த மனிதர்கள் முதலில் வேட்டைக்காக மரங்கள் மற்றும் எலும்புகளால் ஆன கருவிகளை பயன்படுத்தினர். அது பயன்பாட்டில் நாளடைவில் சிதைந்தும் அழிந்தும் போயின இதற்கு மாற்றாக நிலைத்து நிற்கக்கூடிய வகையில் எளிதில் சிதையாத கல் ஆயுதங்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அந்த ஆயுதங்கள் சொர சொரப்பாக இருந்தது இதனால் வேட்டையாடுவதிலும் பயன்படுத்துவதில் பல சிரமங்கள் தோன்றின அதை களைவதற்காக வேட்டைக் கருவிகளை வழுவழுப்பாக பட்டை தீட்ட தொடங்கினார்கள். அவ்வாறு பட்டை தீட்டவும் கூர் செய்வதற்கும் நீர் தேவைப்பட்டது அதனால் நீர் தேங்கும் மலைப் பகுதிகளையும் பாறைகளையும் தேர்வு செய்தார்கள் ஆகவே நீர் தேங்கும் அளவிலான சுனைகளை கொண்ட இந்த அமரக்குன்று மற்றும் நீர் தேங்கும் வசதிகள் உள்ள இந்த பாறைகளை பயன்படுத்தி உள்ளார்கள். அவ்வாறு பட்டை தீட்டிய இடங்களே நாங்கள் கண்டறிந்த இவ்கற்குழிகளாகும் .
அமரக்கல் குன்றானது மிகப்பெரிய பாறைகளை கொண்டதாக உள்ளது.அதன் நடுவில் நீர் தேங்கும் பெரிய சுனை ஒன்று உள்ளது. அதன் அருகில் நான்கு இடங்களில் வெவ்வேறு அளவுகளில் வழவழப்பான குழிகள் இருப்பதை கண்டறிந்தோம், அதில் ஒரு குழி 21 சென்டி மீட்டர் நீளமும் 10 சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக இருந்தது. மேலும் வெவ்வேறு அளவுகளில் இரண்டு குழிகள் காணப்பட்டன. அந்த குழிகளை ஆய்வு செய்த பொழுது அதுகற்கால மனிதர்கள் உபயோகப்படுத்திய கல் ஆயுதங்களை கூர்மை செய்ய அல்லது பட்டை தீட்டிய அடையாளம் என்பது தெரியவந்துள்ளது.
மேலும் இவ்விடத்திற்கு அருகில் உள்ள இரண்டு பெரிய பாறைகளிலும் இதே போன்ற நீர் தேங்கும் சுனைகளும் அதற்கு அருகிலேயே பல்வேறு அளவுகளில் 9 இடங்களில் வழவழப்பான பல்வேறு குழிகளை கண்டறிந்தோம். இந்த குன்று மற்றும் பாறைகளில் நீர்த் தேங்கும் சுனைகளை சுற்றி பல இடங்களில் உள்ள இந்த வழவழப்பான இக்குழிகள் பெருங்கற்கால மனிதர்கள் தங்களின் கல் ஆயுதங்களை பட்டை தீட்டி கூர்மைப்படுத்தி அவற்றைக்கொண்டு விலங்குகளை வேட்டையாடியும் வேட்டையாடிய விலங்குகளின் இறைச்சிகளை உணவுக்காக பல துண்டுகளாக பயன்படுத்தவும் இக்கருவிகளை பயன்படுத்தினார்கள் அந்த கருவிகளை கூர் தீட்டுவதற்க்கு நீர் வசதி தேவைப்பட்டது எனவே நீர் தங்கும் வசதி உள்ள சுனைகளை கொண்ட குன்றுகளையும் பாறைகளையும் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.
எனவே இந்த இடத்தில் ஓர் இனக் குழுவாக புதிய கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்து இருக்க வாய்ப்புள்ளதாக கருதவேண்டியுள்ளது. மேலும் இவ் இடங்களுக்கு அருகிலேயே பெருங்கற்கால மனிதர்களின் ஈமச் சின்னங்களான கல் வட்டங்கள் மற்றும் கல்திட்டைகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்ததை உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம் மூன்று மாதங்களுக்கு முன் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது .தொடர்ந்து 5000 ஆண்டுகளாக இந்த ஊரில் மனிதர்கள் வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இவ்வூரின் சிறப்பாகும்.கடந்த கால வரலாற்றை நிகழ்கால சமுதாயத்திற்கு அடையாளமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும் இதுபோன்ற தொல்பழங்கால வரலாற்று சின்னங்களை பாதுகாப்பது நம் கடமையாகும் எனவே தமிழகத் தொல்லியல் துறை இவ்விடங்களை உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எண்ணமாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.