சென்னை மாங்காடு அடுத்த கோவூர், ராயல் நகர், 3வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் சுரேஷ்குமார் (48), இந்நிலையில் நேற்று மாலை வீட்டிற்கு வந்த நபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி சுரேஷ்குமாரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சுரேஷ்குமார் திருமணம் செய்து கொள்ளாமல் தனது பெற்றோருடன் வசித்து வருவதாகவும் தனக்கு சொந்தமான ஒரு வீட்டை ரூ.2 கோடிக்கு விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளார். இந்த வீட்டை ஏற்கனவே சிலர் வாங்கி கொள்வதாக பேசிய நிலையில், நேற்று அமாவாசை என்பதால் முன்தொகை கொடுப்பதற்காக சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதையடுத்து அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது இவர்களுக்கு நன்கு தெரிந்த நபர்கள் சுமார் 11 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி சுரேஷ்குமாரின் கை, கால்களை கட்டி காரில் கடத்திச் சென்றுள்ளனர். மேலும் அங்கு செல்லும்போது சுரேஷ்குமார் தங்களுக்கு ரூ.1 கோடி தர வேண்டும் என்றும் அதன் காரணமாக அழைத்துச் செல்வதாக அங்கிருந்த ஒருவரிடம் கூறிவிட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இது குறித்து மாங்காடு போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து சுரேஷ்குமார் எங்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார். என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்துவரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து சொகுசு காரில் வந்த சிலரை போலீசார் கைது செய்து நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் சுரேஷ்குமாரின் தம்பி ஒருவர் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு ரூ.1 கோடி வரை பணம் தர வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷ்குமார் தனக்கு சொந்தமான வீட்டை ரூ.2 கோடி மதிப்பீட்டில் விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார்.
எனவே சுரேஷ்குமாரை கடத்தினால் தங்களுக்கு வரவேண்டிய ரூபாய் ஒரு கோடி பணம் கிடைத்துவிடும் என வீட்டை வாங்குவதற்கு முன் தொகை கொடுப்பது போல் முதலில் மூன்று நபர்கள் வீட்டிற்குள் வந்து சுரேஷ்குமாரிடம் பேசிக்கொண்டிருந்தபோது சிறிது நேரம் கழித்து உள்ளே நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் சுரேஷ்குமாரை கத்தியை காட்டி மிரட்டி கை, கால்களை கட்டி காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகள், செல்போன் அழைப்புகளை அடிப்படையாக கொண்டு சேலத்தில் இருந்து அவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தற்போது போலீஸ் நிலையம் அழைத்து வரும் பணி நடைபெற்று வருகிறது மேலும் இந்த கடத்தலுக்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.