ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் தவிக்கும் 60 குடும்பங்களுக்கு, காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சார்பில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாத காலமாக வைரஸ் தொற்று பரவல் வேகம் அதிகரித்து வந்தன. இதன் எதிரொலியாக கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மற்றும் கடந்த ஒரு வார காலமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது . அதேபோல் வருகின்ற ஏழாம் தேதி வரை மீண்டும் மற்றொரு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.
கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பொழுது அத்தியாவசிய கடைகள் , மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகள் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்து. ஆனால் இம்முறை கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால், இம்முறை அவற்றுக்கு அனுமதி அளிக்கப்படாமல் மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தள்ளு வண்டிகளில் அத்தியவசிய பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனவே எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் தினக்கூலிகள் மற்றும் பழங்குடியினர் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது . காவல் துறை சார்பிலும் பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஏழை-எளிய பழங்குடியின மக்கள் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இதுகுறி த்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் சரக காவல்துறை டிஐஜி சாமுண்டீஸ்வரி, வாழ்வாதாரம் இழந்து அவதிப்பட்டு வரும் பழங்குடி இன மக்களுக்கு உதவி செய்ய முயற்சி மேற்கொண்டார். முயற்சியின் பலனாக டிஐஜி சாமுண்டீஸ்வரியின் ஏற்பாட்டின் பேரில் செவிலிமேடு, ஓரிக்கை, குருவிமலை, பிள்ளையார் பாளையம், பஞ்சுப் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த 60 பழங்குடியின குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரிசி,பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரண பொருட்கள் அடங்கிய தொகுப்புகள்,அவர்களின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று சமூக இடைவெளியுடன் காவல்துறையின் சார்பில் வழங்கப்பட்டது.
காவல்துறையின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண உதவிப் பொருட்களை பெற்றுக்கொண்ட பழங்குடியின குடும்பத்தினர் காவல்துறை டிஐஜி சாமுண்டீஸ்வரிக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இதேபோல் காவல்துறையினருக்கு வரும் தகவலின் அடிப்படையில் தினமும் பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்கள். காவல்துறையினருக்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு உணவு தேவை என்றால் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. அதேபோல மருத்துவ உதவி தேவை என்றால் அதற்கான ஏற்பாடுகளும் காவல் துறை சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்கள பணியாளர்களாக இருக்கும் காவல் துறையினர் அனைத்து பேரிடர் காலத்திலும் பொதுமக்களுடன் இணைந்து பொதுமக்களின் பாதுகாப்புக்காக தங்களுடைய சிரமத்தையும் பொருட்படுத்தாமல் பணியாற்றிவருவது பாராட்டக் கூடியது.