உலகளவில் சுற்றுலாத் தளாமகவும்,கோவில் நகராமாகவும் விளங்கி வரும் காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெரு பகுதிகளில் பக்தர்கள்,பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரமாக இருந்த பல கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரடியாக அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து இதே போல் அப்பகுதியிலுள்ள நடைப்பாதைகளில் நீண்ட நாட்களாக உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றிட வேண்டும் என வெகுவாக எழுந்த கோரிக்கையை அடுத்து காமாட்சியம்மன் கோவில் சன்னதி தெரு பகுதிகளில் நிரந்தரமாக அனைத்து விதமான ஆக்கிரமிப்புகளை அகற்றிட மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன் படி இன்றைய தினம் காமாட்சியம்மன் சன்னதி தெரு பகுதிகளில் நடைபாதைகளை ஆக்கிரமித்து இருந்த கடைகள், கடை மேற்கூரைகள் உள்ளிட்டவற்றை ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு மாநகராட்சி ஊழியர்கள் அதிரடியாக அகற்றும் பணியினை போலீசாசின் பாதுகாப்புடன் மேற்கொண்டனர்.
முன்னதாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் முறையான நோட்டிஸ் வழங்கப்பட்டிருந்ததை அடுத்து ஒரு சிலக்கடைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றியிருந்தனர். அவ்வாறு மாநகராட்சி நிர்வாகம் நோட்டிஸ் கொடுத்தும் அகற்றப்படாத ஆக்கிமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி ஆக்கிரமிப்பு பொருட்களை மாநகராட்சியின் வண்டியில் ஏற்றிச் சென்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில் முறையாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் சன்னதி தெருவில் கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் மேற்கொண்டிருந்த அவர்கள் வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இருந்தும் அவர்கள் வெளியேறாமல் இருந்து வந்த காரணத்தினால் தற்போது அவர்களுடைய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்தனர். தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றும் பணி நடைபெறும் எனவும் கூறினர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. நோட்டீஸ் கொடுக்கப்பட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்ட காலத்திற்குள், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்றால் அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருவது குறிப்பிடத்தக்கது .
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்