ரோட்டரி சங்கம் சார்பில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் காஞ்சிபுரம் மாநகர முக்கிய சாலை ஓரங்களில் ரோஸ் நிற சுகாதார கழிப்பறைகள். சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அமைப்பு.
வரலாற்று சிறப்புமிக்க நகரம்
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : கோவில் நகரம், பட்டு நகரம், சுற்றுலா நகரம் என அறியப்படும் காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் நாள்தோறும் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும், பட்டுச்சேலை வாங்க வரும் வாடிக்கையாளர்களும் என பல்லாயிர கணக்கானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து செல்பவர்கள் தங்களுக்கு ஏற்படும் இயற்கை உபாதைகளை கழிக்க உரிய இடமில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
பொதுக்கழிப்பிடங்கள் அதிக அளவு அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகளும், காஞ்சிபுரம் பொதுமக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான இடங்களில் பொதுக்கழிப்பிடங்கள் இல்லை என்பது நீண்ட கால குற்றச்சாட்டாகவே இருந்து வந்தது.
ரோஸ் நிற சுகாதார கழிவறைகள்
மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கட்டண கழிப்பிடங்கள் இருந்தாலும் முக்கிய பகுதிகளில் இல்லாததால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதனை அறிந்து பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் இந்திய ரோட்டரி சங்கம் சார்பில் காஞ்சிபுரம் நகரில் மக்கள் அதிகம் கூடும் காந்தி சாலை, காமராஜர் சாலை ஆகிய இரு இடங்களில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் நவீன முறையில், கன்டெய்னரில் செய்யப்பட்ட ரோஸ் நிற சுகாதார கழிவறைகள் தயார் செய்யப்பட்டு அமைக்கப்பட்டு உள்ளது.
மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை
முதல் கட்டமாக மாநகராட்சி நிர்வாகத்தின் ஓத்துழைப் போடு இரு இடங்களில் அமைக்கப்படும் சுகாதார கழிப்பிடங்களில் வரவேற்பினை கொடுத்து மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ரோட்டரி சங்க கவர்னர் பரணிதரன் தெரிவித்துள்ளார்.
பிங்க் நிறத்தில், அனைவரின் கவனத்தை திருப்பும் வகையில் இந்த கழிப்பிடங்கள் அமைந்திருப்பதால், பொதுமக்கள் விரைவாக இந்த கழிப்பிடம் குறித்து அறிந்து கொள்ள முடியும் வகையில் உள்ளது. இது போன்ற கழிப்பிடங்கள் மாநகராட்சி முழுவதும் பல்வேறு இடங்களில் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.