காஞ்சிபுரம் ( Kanchipuram News) : காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் ரோஜா. இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டித்துரை என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 05 ஆம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணத்திற்கு ஒப்புதல் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ரோஜாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்த பாண்டித்துரை அவரிடம் பலமுறை உறவு கொண்டதன் காரணமாக ரோஜா மூன்று மாதம் கர்ப்பமாகியுள்ளார்.

 

இந்நிலையில் பாண்டித்துரை எனது குடும்பத்தினருக்கு உன்னை பிடிக்கவில்லை எனக் கூறி நழுவ பார்த்த நிலையில் அப்பெண் காஞ்சிபுரம் எஸ் பி அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் காயத்ரி,  இரு தரப்பினரும் விசாரணை மேற்கொண்டு திருமணம் செய்தால் மட்டுமே அவர்கள் புகாரினை வாபஸ் பெறுவதாக தெரிவிப்பதாக கூறியதின் பேரில் காவல் நிலையத்திற்கு முன்புள்ள பிள்ளையார் கோயிலில் மாலை மாற்றி பாண்டித்துரை தாலி கட்டினார்.

 

இதன் பின் நேராக அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று  பெண்ணின் உறவினர்  திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்து புகாரை வாபஸ் பெறுவதாக தெரிவித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்படுத்தியது.