வடக்குப்பட்டு அகழாய்வு ( vadakkupattu archaeological site )

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்துள்ள வடக்குப்பட்டு ஊராட்சியில், சென்னை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில், கடந்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை அகழாய்வு பணிகள் நடந்தன. மூன்று மாதங்கள் நடைபெற்ற முதற்கட்ட தொல்லியல் ஆய்வில் , தங்க அணிகலன்கள் உள்ளிட்ட பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைத்தது.



 

இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி

 

இதனை அடுத்து மே மாதம் 19ஆம் தேதி இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி துவங்கியது. இந்த அகழ்வாராய்ச்சி பணியானது 3 முதல் 4 மாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் கட்ட  அகழ்வாராய்ச்சி துவங்கப்பட்ட ஒரு மாதத்தில், பல்வேறு தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 4 இடங்களில் அகழ்வாழ்வு குழிகள் தோண்டப்பட்டு இந்த அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்று வருகிறது. 



கடந்த ஒரு மாதத்தில் 18 இலிருந்து 43 சென்டிமீட்டர் வரை பல்வேறு ஆழங்களில் அகழ்வு பணி நடைபெற்றுள்ளது. இதில் இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு விளையாட்டு பொருட்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெண்கள் விளையாடக்கூடிய, வட்டச்சில்லுக்கள், கூம்பு வடிவிலான ஜாடிகள், பானைகளின் வடிவத்தை உருவாக்கும்  கருவிகள், பானை ஓடுகள் முத்திரையை ஆகியவை கிடைக்கப்பட்டுள்ளன. 



 

பல்லவர்கள் மற்றும் சோழர்கள்

 

தங்கத்திலான சிறு தகடு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்பிலான குங்குமச்சிமிழ் போல் காட்சியளிக்க கூடிய சிறிய கிண்ணம்  ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆணி போன்ற தண்டுப் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பல்வேறு கற்களால் செய்யப்பட்ட மணிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜராஜன் சோழர் காலத்தில் நாணயம் மற்றும் சோழர்கள் கால கைவண்ணத்தில் உருவான செம்பு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் பல்லவர்கள் மற்றும் சோழர்கள் கால தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்படலாம் என ஆய்வாளர்கள் கருத்துகின்றனர்.


 

தொடர்ச்சியாக வாழ்ந்த மனிதர்கள்
 
பெரும்பாலான இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளும் பொழுது, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கான மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்படும். ஆனால், அதற்கு மாறாக இந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின்படி, தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் மனிதர் வாழ்ந்ததற்கான தடயம் உள்ளது. தற்பொழுது கூட அகழ்வாராய்ச்சி நடைபெறும் பகுதிக்கு அருகிலேயே பொதுமக்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தனர்.



மிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அகழ்வாராய்ச்சி மற்றும் தொல்லியல் சார்ந்த ஆய்வுகள் நடைபெற்று வருவது வரலாற்று ஆய்வாளர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது துவங்கப்பட்ட அகழ்வாராட்சியில் அதிக அளவு பொருட்கள் கிடைக்கப்பட்டு இருப்பது ஆய்வாளர்கள் இடையே ஆர்வத்தை தூண்டி உள்ளதாகவே இருக்கிறது. தொடர்ந்து இது போன்ற அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்