காஞ்சிபுரம் என்று சொன்னாலே பலருக்கும் கோயில்கள் தான் நினைவுக்கு வரும். நாம் பெரும்பாலும் காஞ்சிபுரம் சென்றவுடன் ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் காமாட்சி அம்மன் கோயில் ஆகியவற்றை பார்த்துவிட்டு வந்துவிடுவோம். ஆனால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அழகிய மற்றும் புராதமான கோயில்கள் மற்றும் இடங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த சஞ்சீவீராயர் கோயிலும், நடவாவி கிணறும்.



 

சஞ்சீவீராயர் கோயில்

 

சஞ்சீவீராயர் கோயில்  முழுவதும் கருங்கற்களால் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கியபடி இக்கோயில் காட்சி தருகிறது. இந்த கோயிலை விஜயநகர பேரரசு காலத்தில் எச்சூர் தாதாச்சாரியார் என்பவரால்  கோயில் கட்டப்பட்டது. ஆஞ்சநேயருக்காக கட்டப்பட்ட மிக பெரிய கோயில் இது என்று சொல்லலாம். ஆஞ்சநேயர் இருக்கரங்களை கூப்பியவாறு வட திசையை நோக்கி பார்க்கிறார். அதாவது அயோத்தி இருக்கும் திசையை பார்க்கிறார், அவர் பார்க்கும் திசையிலேயே பரந்து விரிந்த சுமார் 130 ஏக்கர் ஏரியே இக்கோயிலின் திருக்குளம் போல் காட்சி தருகிறது. தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் கோயில் இதுவே என்று கூறுகிறார்கள்.



 

கோயிலின் வெளி பிரகாரத்தின் இருபுறங்களிலும் தூண்களுடன் கூடிய மானுடம் உள்ளது. கோயிலில் உள்ளே சென்றால் உள் பிரகாரம் பரந்து விரிந்து காணப்படுகிறது. வலது புறத்தில் தூண்களுடன் கூடிய மண்டபங்கள் உள்ளன. அதன் மேல் விஷ்ணுவின் தசாவதார சிற்பங்கள் உள்ளன. ஆனால் அவைகள் சிதைந்து உள்ளதால் பல நூற்றாண்டுகளை கடந்து இருக்கும் இந்த கோவில புனரமைக்க படாமல் அப்படியே உள்ளது. 

 

அய்யங்கார்குளம் 

 

இந்த 130 ஏக்கர் பரப்புள்ள குளம் பார்ப்பதற்கு கடல் போல் காட்சி கொடுக்கிறது. அய்யங்கார்குளம் என இந்த ஊருக்குப் பெயர் வருவதற்கு இந்த குளம்தான் காரணம். விஜயநகரப் பேரரசு ஆட்சியின்போது லட்சுமிகுமார தாததேசிக அய்யங்கார் என்பவர் இந்தக் குளத்தை வெட்டி உள்ளார். அதன் காரணமாகவே அவர் பெயரைத் தாங்கி இந்தக் கிராமத்துக்கு ‘அய்யங்கார்குளம்’ என்று பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இந்தக் குளத்துக்கு தாத சமுத்திரம் என்று இன்னொரு பெயரும் இருக்கிறது. இவரே ஸ்ரீ அனுமத் விம்சத என்ற தோத்திரப் பாடலையும் இயற்றினார். 

 

சிதிலமடைந்த நிலையில் கோயில்

 

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பலநூறு கோயில்கள் இருந்தாலும் பிரதானமான முக்கிய கோயில்கள் மட்டுமே பராமரிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பல நூற்றாண்டுகளை கடந்து ஆஞ்சநேயருக்கு இருக்கும் மிகப் பெரிய கோவிலை சீரமைக்க படாமல் அழிந்து வருவதை பக்தர்கள் வேதனையுடன் பார்த்து செல்கின்றனர். கட்டிடக்கலைக்கு அழகாக இருந்த இக்கோயில் தொடர்ந்து புனரமைக்க படாமல் இருப்பதால் சிற்பங்கள் மற்றும் கோயில் கட்டமைப்புகள் தற்போது சிதைந்து அழியும் நிலையில் உள்ளது . 

 


 

கோயில் கட்டமைப்புகள் தற்போது சிதைந்து அழியும் நிலையில் உள்ளது. இந்த கோயில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஆக்கிரமிப்பு அழகிய வேலைப்பாடுகளுடன், கருங்கல்லால் கட்டப்பட்ட நடவாவி கிணறு, பல நூற்றாண்டுகளை கடந்துவிட்டது. வெயிலும், மழையையும் இந்த வரலாற்று சின்னத்தில் விரிசலை ஏற்படுத்தி வருகின்றன. வேம்பு, நுனா என, பல்வகை செடிகள் முளைத்து, கட்டடத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. வேர்கள் பரவினால், கட்டடம் முழுமையாக சரியும் ஆபத்தான நிலையில் கோயில் இருந்து வருகிறது.

 

நடவாவி கிணறு

 

அதேபோல இதே ஊரில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு அருகே நடவாவி கிணறு என்று ஒன்று உள்ளது. அந்த மண்டபம் முழுவதும் நீரில் மூழ்கி கிடக்கிறது. அதையொட்டி, கல்லால் ஆன ஏற்றம் பிரம்மாண்டமாக நிற்கிறது. கிணற்றில் இருந்து நீரை இறைக்க ஏற்றத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். மண்டபம் மட்டுமல்ல, படிக்கட்டுகள் வரை நீர் நிரம்பிக் கிடக்கிறது. அய்யங்கார் குளத்தை போலவே இதுவும் எப்போதும் வற்றாத கிணறு.



 

கிணற்றின் முன் உள்ள கல் வளைவு ஆனது அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதில் மேல் பகுதியில் கஜலக்ஷ்மி உருவத்தை வடித்துள்ளார். தூணின் இருபுறங்களிலும் வீரர்கள் யாளி மீது அமர்ந்து உள்ளது போல் வடித்துள்ளார்கள்.



 

சித்ரா பவுர்ணமி திருவிழா

 

நடவாவிக் கிணற்றில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சி வரதராஜப் பெருமாள் இந்தக் கிணற்றில் எழுந்தருள்கிறார். இதற்காக நடவாவிக் கிணற்றில் உள்ள நீரை இறைத்துவிடுகிறார்கள். இப்போதெல்லாம் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றுகிறார்கள். முன்பு ஏற்றம் மூலமே தண்ணீரை வெளியேற்றியிருக்கிறார்கள். தண்ணீரை முழுவதும் வெளியேற்றிய பிறகு சித்ரா பவுர்ணமி அன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து உற்சவ மூர்த்தி இங்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பூமிக்கு அடியில் உள்ள மண்டபத்துக் கிணற்று நீரில் திருமஞ்சனம் செய்யப்படுகிறார். 



 

பின்னர், கிணற்றில் இருந்து எழுந்தருளும் வரதராஜப் பெருமாள், மீண்டும் காஞ்சிபுரத்தில் உள்ள கோயிலுக்குத் திருப்பி எடுத்துச் செல்லப்படுகிறார். இந்த தினத்தன்று இவ்வூரானது பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும். இத்தனை சிறப்பு மிக்க இந்த கிணறும் முறையாக பராமரிக்கப்படாமல் தொடர்ந்து சிதிலமடைந்து வருகிறது என குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர். குறிப்பாக வெட்ட வெளியில் இருக்கும் இந்த கிணறு முறையாக பராமரிக்கப்படாததால், அந்த பகுதியில் சமூக விரோத செயலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.