சென்னை விமான நிலையத்தில் உணவு மற்றும் குளிர்பானங்களின் விலை வெளியில் விற்கப்படுவதை விட கூடுதலாக இருப்பதாக பல பயணிகளும் புகார் எழுப்பி வந்துள்ள பின்னணியில், தற்போது அதற்குத் தீர்வு அளிக்கும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் உணவு, குளிர்பானங்களின் விலையைக் குறைக்கவுள்ளதாக சென்னை விமான நிலையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 


இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் பலரும் கடந்த சில ஆண்டுகளாக பயணிகளிடம் உணவு விலை குறித்து தொடர்ந்து புகார்களைப் பெற்று வருவதால், விமான நிலையத்தில் விற்கப்படும் உணவு, குளிர்பானங்களின் விலைகளில் சுமார் 20 சதவிகிதத்தைக் குறைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.



`ஒரு பயணிக்கு சரியான விலையாகத் தெரியும் பொருள்கள் வேறு பயணிக்கு அதிகமாகத் தெரியலாம். விமான நிலையத்தில் இயங்கி வரும் உணவுக் கடைகள் அனைத்துமே கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு, தற்போது அதில் இருந்து மீண்டு வருகின்றன. ஆனால், பயணிகள் உணவு விலை மீதான அதிருப்தி தெரிவித்து வருவதால், நாங்கள் பேச்சு வார்த்தை மேற்கொண்டு, உணவு, குளிர்பானங்களின் விலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளோம். மேலும், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருள்களின் விலை அதன் MRP அடிப்படையில் வழக்கம் போல விற்பனை செய்யப்படும்’ என விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 






கடந்த காலங்களின், காபி, டீ ஆகியவற்றின் அதிகமான விலை நிர்ணயம் காரணமாக பயணிகள் புகார் எழுப்பியதால், இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணையம் தரப்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களின் சில பகுதிகளில் உள்ள கடைகளில் தள்ளுபடி செய்யப்பட்ட விலைகளில் காபி, டீ ஆகியவை விற்கப்படுகின்றன எனக் கூறப்பட்டுள்ளது. 



சென்னை விமான நிலையத்தில் புதிதாக ஒருங்கிணைந்த முனையம் ஒன்றை இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணையம் உருவாக்கி வரும் சூழலில், உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் உள்ள விற்பனை இடங்களின் தேவை அதிகரிக்கவுள்ளது. இதனால், சென்னை விமான நிலையத்தில் பயணம் செல்ல வருவோருக்கு உணவு உண்பதற்கும், பொருள்கள் வாங்குவதற்கும் கூடுதலான ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. வெவ்வேறு விமானங்களில் மாறி மாறி பயணிப்போருக்கு, காத்திருக்கும் நேரத்தில் பொருள்கள் வாங்குவதற்கும், உணவு உண்பதற்கும் இது பெரிதும் பயன்படும் எனவும் இந்திய விமான நிலையங்கள் கட்டுப்பாட்டு ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.