108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயில் எனப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பௌர்ணமியையொட்டி நடவாவி உற்சவம் நடைபெற்றது. இந்த உற்சவத்திற்காக கோயிலில் இருந்து சுவாமி புறப்பட்டு ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கல், தூசி போன்ற பல்வேறு கிராமங்களில் மண்டகப்படி கண்டு அருளியப்படி ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அக்கோவிலின் அருகில் பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் இறக்கி 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து, மண்டபத்தில் வைத்து, தீபாராதனை செய்து நெய்வேத்தியம் படைக்கப்பட்டது.
பின்னர் , புறப்பாடு நடைபெற்று நள்ளிரவு செவிலிமேடு பாலாற்று படுகையில் வரதராஜர் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்நிலையில் பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு அவை கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் தள்ளி தாக்கி கொண்ட சம்பவம் சுவாமி தரிசனத்திற்காக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இடையே முகம் சுளிப்பை ஏற்படுத்தியது.
ஒவ்வொரு பெரிய திருவிழாவின் போதும் இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதல் நடைபெறாமல் இருக்க இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு, இதற்கு ஓர் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்