காஞ்சிபுரம், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2வது நாளாக இடி, காற்றுடன் கனமழை
கிஷோர் | 10 Aug 2023 12:36 PM (IST)
காற்று வீசி சாலை தடுப்புகள் கீழே விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதி.
சூறை காற்று வீசி சாலை தடுப்புகள் கீழே விழுந்ததால் வாகன ஓட்டிகள் அவதி.
காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் முடிவடைந்தாலும், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் வெப்பம் காரணமாக பொதுமக்களும் வாகனம் ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று 2வது நாளாக , மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பயங்கர சூறை காற்றுடன் இடி மின்னலுடன் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை,தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், பாலு செட்டி சத்திரம், தாமல், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்தது.
சூறை காற்றுடன் கன மழை பெய்ததால் காஞ்சிபுரத்தில் முக்கிய சாலைகளில் வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்புகள் கீழே விழுந்துள்ள நிலையில், சாலையில் மழை நீர் தேங்கி வருவதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும் வெய்யிலின் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
10.08.2023 மற்றும் 11.08.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை :
10.08.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.