காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த  ஊத்துக்காடு கூட்ரோடு பகுதியில் இரு சக்கரம் மற்றும் கார்களுக்கான வயரிங் தயாரிக்கும், மதர்சன் சுமி சிஸ்டம்ஸ் லிமிடெட் (MOTHERSON SUMI SYSTEMS LTD ) என்ற தனியார் உற்பத்தி தொழிற்சாலை கடந்த ஒன்பது வருடங்களாக இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் வாலாஜாபாத் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் என  மூன்று சிப்ட்கள் வீதம்,  சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர்.



 

இந்நிலையில் இத் தொழிற்சாலையில் நேற்றைய தினம் இரவு சிப்டில் வேலை செய்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இத் தொழிற்சாலையிலேயே இயங்கி வரும் கேண்டினில் இரவு நேர உணவை சாப்பிட்டுள்ளனர். இந்நிலையில் இத்தொழிற்சாலையில் இரவு நேர உணவை சாப்பிட்டபோது உணவில் பல்லி ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. பல்லி இருந்த உணவை உண்டவர்களில் சுமார் 75-க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 



இதையடுத்து இது குறித்து தகவலறிந்த தொழிற்சாலை நிர்வாகமானது உடனடியாக வாந்தி மயக்கமடைந்த சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை முதற்கட்டமாக  உடனடியாக தொழிற்சாலை பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜாபாத் பகுதியில் இயங்கு வரும் தனியார் மருத்துவமனைக்கும்,வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சற்று கடுமையாக பாதிக்கப்பட்ட சில பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும்,மீதமுள்ளவர்கள் பொது பிரிவிலும் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு அங்கு  தொடர்ந்து  மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இருந்தபோதிலும் தற்போது வரையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் சிகிச்சை பெற
வில்லை என தனியார் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக பாதிப்புக்குள்ளான சுமார் 15க்கும் மேற்பட்ட பெண்கள் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலுள்ள தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.



 

தொழிற்சாலையில் பல்லி இருந்த  இரவு உணவு உண்டவர்களில் சுமார் 75-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தொழிற்சாலையில் இரவு சிப்டில் பணி புரிந்தவர்களிடையே கடும் பீதியையும்,அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் காரணமாக இத்தொழிற்சாலையில் இரவு நேர சிப்ட் நிறுத்தப்பட்டு இரவு நேர சிப்டில் இருந்த அனைவரையும் தொழிற்சாலை நிர்வாகமானது வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் இதுகுறித்து தகவலறிந்து இத்தொழிற்சாலையில் பாதுகாப்பிற்காக  காஞ்சிபுரம் காவல் உட்கோட்ட டி.எஸ்.பி.ஜூலியர் சீசர் தலைமையில் போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.