சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்பொழுது பல்வேறு ரவுடிகள் உருவாவது தொடர் கதையாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகளும், பல பெரு நிறுவனங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. சில சமயங்களில் போட்டியாக இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்களை மிரட்டுவதற்கு தொழிலதிபர்களே ரவுடிகளை உருவாக்குகின்றனர் என்ற குற்றச்சாட்டும் ஒரு புறம் இருந்து தான் வருகிறது. அதே போன்று காவல்துறையினரும் ரவுடிகளை ஆரம்பத்திலேயே, அடக்காமல் அவர்களை வளர விடுவதற்கு காவல் துறையினரும் துணை புரிந்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் இருக்கின்றன. எப்படி இருந்தாலும் ரவுடிகளால் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதால் காவல்துறையினர்களுக்கு ரவுடிகள் தொடர் தலைவலியை கொடுத்து வருகின்றனர். 


பிரபல ரவுடி படப்பை குணா


அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற என்.குணசேகரன். இவர் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் அவருக்கு எதிராக நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பாக 48 வழக்கில் 8 கொலை வழக்குகள் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். 


படப்பை குணாவுக்கு போலீஸ் போட்ட ஸ்கெட்ச்


படப்பை குணாவின் அட்டகாசம் நாளுக்கு நாள் சென்னை புறநகர் பகுதிகளில் அதிகரித்து வந்தது. ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் மிரட்டி வருவதாகவும் குற்றச்சாட்டுகளும் பல்வேறு புகார்களும் எழுந்த வண்ணம் இருந்தன. ரௌடிகளை கட்டுக்குள் கொண்டு வர வெள்ளத்துரை தலைமையிலான போலீசார் தீவிர நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக படைப்பை குணாவின் ஆதரவாளர்கள் உதவி செய்பவர்கள் என பலரும் கைது செய்யப்பட்டனர். படப்பை குணா விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்த்த நிலையில், நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்தநிலையில், குணா குண்டாஸ் சட்டத்தில் அடைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குண்டாஸில் இருந்து வெளியே வந்து தற்போது  பிற வழக்குகளையும் சந்தித்து வருகிறார்.


அடிதடி to அரசியல்


இந்தநிலையில்  காஞ்சிபுரம் பாஜக மாவட்ட தலைவர்  பாபு  அறிவுறுத்தலின்படி  பாஜகவின்  காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவராக குணசேகரன்   நியமிக்கப்பட்டார்.  அவரது மனைவி  பாஜகவில் பதவி வகித்து வருவதால் இருவரும் இணைந்து கட்சி பணியாற்றி வந்தனர். பிரபல ரவுடி படப்பை குணா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தது பல்வேறு விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனால் படப்பை குணா தரப்பு எந்தவித தவறும் தாங்கள் செய்யவில்லை எனவும்,  அனைத்து வழக்குகளும் புனையப்பட்டது. அனைத்து வழக்குகளையும் சட்டப்படி எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.  காவல் துறையினர் திட்டமிட்டு,  தொடர்ந்து தங்கள் மீது பொய் வழக்கு போட்டு வருவதாகவும் படப்பை குணா தரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தது


 மீண்டும் கைது செய்யப்பட்ட குணா


இந்தநிலையில் இந்த மாதம் மூன்றாம் தேதி படப்பை குணா  வழிப்பறி செய்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். தற்பொழுது பூந்தமல்லி கிளை சிறையில் படப்பை குணா இருந்து வருகிறார். அவர் மீது, காவல்துறையினர் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு பிணையில் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.