மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக  வய நாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பேரிடரால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்காக விரைந்து செயல்பட்ட கேரள மா நில அரசு மத்திய பேரிடர் மீட்புக்குழுவினர், தன்னார்வலர்கள், மருத்துவ மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆற்றிய சேவைகள் பாரட்டிற்குரியவை. இதே போல தமிழ் நாட்டில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளை  நிபுணர் குழு மற்றும்  நவீனத்தொழில் நுட்பத்தின் உதவியுடன் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதோடு,  நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் புதிய கட்டுமானங்கள் உருவாக்கப்படுவதை தவிர்க்கும் விதமாக விதிமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும். பருவ நிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடமும் ஏற்படுத்தி பேரிடர் சேதங்களை கட்டுப்படுத்த தமிழக அரசை வலியுறுத்தல்


2025 ஆம் ஆண்டு பிப் 9 ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நிர்வாகக்குழுவுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. இது தொடர்பாக நிர்வாகக்குழு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் செயற்குழு அங்கீகரிக்கிறது


முத்தமிழ் அறிஞர் கலைவருக்கு நாணயம் வெளியிட தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் முயற்சிக்கும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த மத்திய அரசுக்கும் பாராட்டு.




எம்.எஸ். சுவாமி நாதன் கமிட்டி பரிந்துரைத்த வேளாண் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அமல்படுத்த உடனடியாக சட்ட உத்தரவாதங்களை அளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தல்


மனசாட்சியுடன் தொடர்ந்து வரி செலுத்தும் மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய பட்ஜெட்டில் உரிய சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தல்


தமிழகத்தில் தொடங்கவிருக்கும் வடகிழக்குப்பருவ மழையை முன்னிட்டு கடந்த கால மழை வெள்ளங்களால் தமிழகம் கற்றுக் கொண்ட  பாடங்களை மனதில் வைத்துக்கொண்டு  பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் உரிய முன்னெச்சரிகை நடவடிக்கை எடுக்க தமிழக அரசை வலியுறுத்தல்


மக்களை ஒரு பண்பட்ட நாகரீகச் சமுதாயமாக நடத்துவதற்கான கடமை எல்லா அரசுக்கும் உண்டு. இதற்கு ஊறு விளைவிக்கிற குற்றங்களான மகளிருக்கு எதிரான வன்கொடுமைகள், போதைப்பழக்கம் போன்றவற்றை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுபவர் மீது துரிதமான நடவடிக்கைகளை எடுக்கவும், அதிகபட்ச தண்டனைகளை விரைந்து வழங்கவும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தல் உள்ளிட்ட  12 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.