சென்னை கலாசேத்திரா கல்லூரி பேராசிரியர்கள் 4 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறி கல்லூரி மாணவிகள் 2 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.


என்ன குற்றச்சாட்டு:


சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணிதேவி கல்லூரி கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பரதநாட்டியம் உள்ளிட்ட கலைகள் பயிற்றுவிக்கப்படுகிறது. மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி முறையில் செயல்படுகிறது.


இந்நிலையில், கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரியில் உள்ள ஆசிரியர் மீது ஏராளமான மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தனர். இது வதந்தி என்று கூறப்பட்டு வந்தது. கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கிய கதாப்பாத்திங்களில் நடிக்க வேண்டுமானால், ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஆசிரியர் மிரட்டியதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


மாணவிகள் எந்த ஆசிரியருக்கு எதிராக புகார் அளித்தனரோ அந்த நபர், சர்வதேச மகளிர் தினத்தன்று கலாஷேத்ராவில் கவுரவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகுதான், இந்தியக் கலைஞர்களுக்காக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் 'கேர்ஸ்பேசஸ்' (c.a.r.e.spaces) எனும் அமைப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவிகள், கலாஷேத்ராவில் நடந்து வரும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் தற்போது பயின்று வருபவர்கள் மட்டுமின்றி, முன்னாள் மாணவர்கள் பலரும் பாலியல் புகார்களை முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த ஆதாரங்களை திரட்டிய 'கேர்ஸ்பேசஸ்' அமைப்பு, தேசிய மகளிர் ஆணையத்திடம் புகார் அளித்தது.


”கேர்ஸ்பேசஸ்” அமைப்பு வழங்கிய ஆதாரங்களின் அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம், தேசிய மகளிர் ஆணையம் புகார் அளித்தது. அதில், ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபிக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, புகார் குறித்து விசாரணை நடத்துமாறு சென்னை காவல் ஆணையருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். 


இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட 24 வயது மாணவி ஒருவர், தனது பெயருக்கும், கல்லூரியின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக, வேண்டுமென்றே தவறான தகவல் பரப்பப்பட்டு உள்ளதாகவும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதன் பேரில், அடையாறு அனைத்து மகளிர் காவல் அதிகாரி விசாரணை நடத்தி மேற்கொண்டனர். 


இந்நிலையில் பாலியல் அத்துமீறல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா அமைப்பு சார்பில், பத்திரிகை தகவல் பணியகம் விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ”சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் விசாரணைக் குழு மூலமாக கடந்த இரண்டரை மாதங்களாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், தாங்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகவோ, தாக்கப்பட்டதாகவோ எந்த மாணவியும் வாக்குமூலம் அளிக்கவில்லை. தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே வதந்திகள் மட்டுமே. தேவைப்பட்டால் தேசிய மகளிர் ஆணையம் நேரில் வந்து விசாரணையை மேற்கொள்ளலாம்” எனவும் கலாஷேத்ரா அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது உள் புகார் விசாரணைக் குழு அமைப்பின் அறிக்கையை, டிஜிபி அலுவலகத்திலும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கலாஷேத்ரா தெரிவித்துள்ளது.


பாலியல் புகார் குறித்த விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு பிறப்பித்த உத்தரவை தேசிய மகளிர் ஆணையம் திரும்பப்பெற்றது. கல்லூரியில் பாலியல் துன்புறுத்தல் ஏதும் நடைபெறவில்லை என நான்கு பேர் குழு அறிக்கை அளித்திருந்தது.


இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். விசாரணை மேற்கொள்வதற்கான உத்தரவு திரும்ப பெறப்பட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.


இதை தொடர்ந்து சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளையின் ருக்மணிதேவி கல்லூரி வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை மூடப்படுவதாக கல்லூரி முதல்வர் அறிவித்தார். 


இரண்டு நாட்களில் விடுதிகளை காலி செய்யுமாறு மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம்  உத்தரவிட்டது.  கல்லூரி மூடப்படும் நாட்களில் தேர்வுகள் இருந்தால் ஒத்திவைக்கப்படும் என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.