பங்குனி உற்சவம்
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உற்சவம் நடைபெற்று வருகிறது. ஏகாம்பரநாதர் கோவிலில் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றாலும், பங்குனி உற்சவம் என்பது மிக முக்கிய உற்சவமாக கருதப்படுகிறது. சுவாமி பல்வேறு வாகனங்களில், தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வீதி உலா வருவது வழக்கம். காஞ்சிபுரத்தில் நடைபெறும் முக்கிய திருவிழா என்பதால், பல்வேறு தரப்பை சேர்ந்த மக்கள் இந்த திருவிழாவிற்கு தங்களால், முடிந்த பல்வேறு வகைகளில் உதவி செய்து வருவது வழக்கமாக உள்ளது.
" சாக்பீஸ் ஓவியம் "
அந்த வகையில், காஞ்சிபுரம் பகுதி சேர்ந்த சகோதரர்களான டில்லி பாபு மற்றும் தினேஷ் ஆகிய இருவரும், கடந்த 2008 ஆண்டு முதல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பிரம்மோற்சவத்தின் போது தினம்தோறும் நடைபெறும் உற்சவத்தை, கரும்பலகையில் சாக்பீஸ் கொண்டு ஓவியமாக வரைந்து, ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள ரிஷிகோபுரம் நுழைவாயிலில், வைப்பது வழக்கம் இந்த நிலையில் இந்த வருடம் அவ்வாறு வைக்கப்பட்ட ஓவியத்தை நேற்று அகற்றியதாக டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகிய இருவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.
இவ்வாறு இவர்கள் வரையும் ஓவியம் உள்ளூரில் மிகப் பிரபலம், அதேபோல் சமூக வலைதளத்தில், இக்கால இளைஞர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து, கடந்த சில ஆண்டுகளாகவே, தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். இதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று கூறலாம், அவ்வாறு பிரபலம் அடைந்த ஓவியம் தற்பொழுது அகற்றப்பட்டு இருப்பது , ஓவியம் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
"எங்களுக்கு அனுமதியும் கொடுத்திருந்தனர்"
இதுகுறித்து டில்லி பாபு நம்மிடம் கூறுகையில், “கடந்த 2008 ஆம் ஆண்டு முதலே நாங்கள் இந்த ஓவியத்தை வரைந்து வருகிறோம். இந்த ஓவியத்தை கோயிலுக்கு வரும் பொதுமக்களும், வெளிநாட்டு, சேவாத்திரிகளும் கண்டு மகிழ்வார்கள். எங்களின் இந்த சேவையை பாராட்டி தமிழக அரசு, கடந்த 2017 ஆம் ஆண்டு கலைவளர்மணி விருது வழங்கியுள்ளது. மேலும் இதற்கு முன் இருந்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அவர்களும், மற்றும் செயல் அலுவலர்கள் ஆகியோர் இதற்கு அனுமதி கொடுத்திருந்தார்கள்.
உள்நோக்கத்துடன் எங்களை
இந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் பங்குனி பிரம்மோற்சவத்தில் வரைந்து வைத்த சாக்பீஸ் ஓவியங்களையும் எங்களுக்கு எந்தவித அறிவிப்பும் செய்யாமல் செயல் அலுவலர் முத்துசாமியும் மற்றும் அறங்காவலர் குழுவும் சேர்ந்து ஓவியப் பலகையை, நேற்று காலை பலகையை எடுத்து வைத்துக் கொண்டனர் என குற்றச்சாட்டை முன் வைக்கிறார் டில்லிபாபு. இதுகுறித்து செயல் அலுவலரிடம் நாங்கள் விளக்கம் கேட்க முயற்சி செய்த பொழுதும் எங்களுடைய அலைபேசி எடுக்காமல் தவிர்ப்பதாகவும், இதற்கு முக்கிய காரணமாக, இந்த கோவிலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்குகள் கொடுத்தல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு அளிப்பது உள்ளிட்ட சமூக பொறுப்பு செயல்களிலும் தாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், காழ்புணர்ச்சியில் உள்நோக்கத்துடன் எங்களை கோவில் சேவை செய்யவிடாமல், தடுத்து எங்கள் சொந்த செலவில் நானும் என் தம்பியும் கடினப்பட்டு சேவையாக வரைந்து வைத்த ஓவியங்களை அழித்ததோடு போர்டுகளை உடைத்து சேதப்படுத்தி எடுத்துச் சென்று விட்டனர்.
ஆன்லைன் மூலமாக புகார்
இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக இந்து சமய அறநிலை துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் ஆகியோருக்கும், சிவக்காஞ்சி காவல் ஆய்வாளருக்கும்புகார் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் டில்லிபாபு. இது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில் விளக்கம் கேட்க, செயல் அலுவலர் தொலைபேசி எண்ணுக்கு பலமுறை முயற்சி செய்தும் தொலைபேசி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது