பொங்கல் விழா கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் களைகட்டி வருகிறது. சென்னை பொன்ற பெருநகரங்களில் வேலை செய்து வந்தவர்கள், தமிழர் திருநாளை குடும்பத்துடன் கொண்டாட சொந்த ஊர்களை சென்றடைந்துள்ளனர். மாட்டுப்பொங்கல் விழா இன்று விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.


இதற்காக பொதுமக்கள் சுற்றுலா தளங்களில் அதிகளவில் கூட உள்ளனர். இதையொட்டி மாவட்டந்தோறும் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் பலத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.


கண்காணிப்பு கேமராக்கள்:


இந்நிலையில், சென்னையிலும் இந்த பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில்,  சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில் போலீஸ் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டது. கடற்கரை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் 28 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 இடங்களில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் போலீஸ் உதவி மையம் நிறுவப்பட்டது. இவற்றின் பயன்பாட்டை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார்.


உதவி மையங்கள்:


அதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், ”மெரினா கடற்கரை மணற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள சூரிய ஒளி ஆற்றலால் இயங்கும் உதவி மையத்தை,  பொதுமக்கள் இரவு நேரங்களிலும் எளிதில் அடையாளம் கண்டு அவசர உதவியை பெற முடியும். பண்டிகை காலங்களில் கூட்டம் அதிகம் இருக்கும் நேரத்தில், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும். அவசர தேவைக்கும் பயன் உள்ளதாக இருக்கும். கூட்ட நெரிசலில் காணாமல் போகும் குழந்தைகள், முதியோர்கள் பற்றி உடனடியாக புகார்கள் தெரிவித்து, அவர்களை கண்டுப்பிடிப்பதற்கு, இந்த போலீஸ் உதவி மையங்கள் முக்கிய பங்கு வகிக்கும்” என்றார்.


மெரினாவில் பலத்த பாதுகாப்பு:


தொடர்ந்து, ”நாளை காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு மெரினா கடற்கரையில் மட்டும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 9 நவீன ட்ரோன்கள் வாயிலாக கடற்கரை பகுதி முழுவதும் கண்காணிக்கப்படும்” என சங்கர் ஜிவால் தெரிவித்தார்.


முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு:


முன்னதாக, மெரினா கடற்கரையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு ஒளிரும் ஜாக்கெட்டுகளை சங்கர் ஜிவால் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர்கள் சிபி சக்ரவர்த்தி, திஷா மிட்டல், துணை கமிஷனர்கள் பி.மகேந்திரன், ரஜத் சதுர்வேதி, ரோகித்நாதன் ராஜகோபால், தேஷ்முக் சேகர் சஞ்சய், உதவி கமிஷனர் பாஸ்கர் உள்பட போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.


போலீசார் சார்பில் பொங்கல் விழா:


இதனிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை போலீசார் சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டார். தொடர்ந்து, கொச்சின் ஹவுஸ் போலீஸ் குடியிருப்பு, பரங்கிமலை ஆயுதப்படை மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் பங்கேற்று சிறப்பித்தார். கிராமிய மனம் கமழும் வகையில் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன. அவற்றை சென்னை மாநகர காவல் ஆணையர் பார்த்து ரசித்து மகிழ்ந்தார்.