அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க மற்றொரு நீதிபதியை நியமிக்கும்படி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அளித்த பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, அவற்றை விசாரிக்க நீதிபதி ஜி. ஜெயச்சந்திரனை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.


அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவில், தனக்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்திருந்ததால், அது தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது.


நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இந்த செயல் நீதித்துறையை களங்கப்படுத்துவது என பன்னீர்செல்வம் தரப்புக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்திருந்தார்.


இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலைமை நீதிபதியிடம் முறையிட்டதற்கு மன்னிப்பு கோரிய பன்னீர்செல்வம் தரப்பில், ஏற்கனவே இரு முறை இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரித்து தீர்ப்பளித்துள்ளதால் மற்றொரு நீதிபதி புதிதாக விசாரணை நடத்துவதே முறையாக இருக்கும் எனவும், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை எனக் கூறி, தலைமை நீதிபதியிடம் அளித்த மனுவை திரும்பப் பெற்று மனுவாக தாக்கல் செய்யப்பட்டது.


எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், எந்த நீதிபதி முன்பும் வாதங்களை முன்வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த இந்த மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஏற்கனவே இரண்டு முறை இந்த விவகாரத்தை விசாரித்து, கருத்தை வெளிப்படுத்தி, உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின்படி, இந்த விவகாரத்தை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு வைப்பதே பொருத்தமானது எனக் கருதுவதால், இந்த வழக்குகளை புதிதாக விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில் வழக்குகளை  தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.


இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பரிந்துரையை ஏற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் நியமித்து உத்தரவிட்டுள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண