சிவசங்கர் பாபாவை முதல் போஸ்கோ வழக்கில் வருகின்ற பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க  நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

 

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் மீது போக்சோ சட்டத்தில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. முதலில் தமிழ்நாடு போலீஸ் விசாரித்த இந்த வழக்கு பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது.



போலீசார் தேடுவதை அறிந்ததும் சிவசங்கர் பாபா தலைமறைவானர் . இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் ஜூன் 16 ஆம் தேதி டெல்லியில் அவரை கைது செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சிவசங்கர் பாபாவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் கணினி, லேப்டாப் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல் இந்த வழக்கில் நிபந்தனை முன்ஜாமீன் பெற்ற சுஷில் ஹரி பள்ளியின் ஆசிரியர்களான தீபா உட்பட 4 ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரணையும் நடத்தினர். தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் இன்று சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி மீண்டும் வருகின்ற நவம்பர் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அப்போது கூடியிருந்த தொண்டர்கள் சிவசங்கர் பாபாவை பார்த்து கை அசைத்தனர். அதில் ஒரு சிறுவன் பாபா "பாய் பாய்" என  தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தான். அச்சிறுவனை பார்த்த பாபா சற்று தெளிவாகி முகமலர்ச்சியுடன், குழந்தைக்கு பாய் பாய் கூறினார்.

 

ஜாமீன் கிடைத்தும் சிறையில்

 

சிவசங்கர் பாபா தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 2 மனுக்கள் மற்றும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதுமட்டுமின்றி பெண்ணை மானபங்கம் செய்தது உள்ளிட்ட 2 வழக்குகள் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வருகின்ற நவம்பர் 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.



இந்நிலையில் சிவசங்கர் பாபா தன் மீது போடப்பட்டுள்ள இரண்டு போக்சோ மீது ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி  இரண்டாவது மற்றும் மூன்றாவது போக்சோ வழக்கிற்கு மட்டும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல் போக்சோ வழக்கு ஜாமீன் தள்ளுபடி செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஜாமீன் கிடைத்தும், சிவசங்கர் பாபா மற்ற வழக்குகளில் சிறையில் இருக்கவேண்டிய நிலை உள்ளது.