செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா வண்டலூரில் அமைந்துள்ளது. இங்கு 2000க்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளை புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளில் செயல்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து 24 மணி நேரமும் பூங்கா அலுவலக ஊழியர்கள் கண்காணித்து வருகின்றனர்.
வண்டலூர் பூங்காவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று காரணமாக 9 வயதான நீலா, 12 வயதான பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மேலும் 9 சிங்கங்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருந்தது. இதையடுத்து பூங்கா ஊழியர்கள் சிங்கங்களை தனியாக பிரித்து தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனை அடுத்து சிங்கங்கள் தொடர்ந்து முழுமையாக குணமடைந்தன. இந்நிலையில் கடந்த மாதம் மீண்டும் வண்டலூர் பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வண்டலூர் பூங்காவிற்கு வருகை தந்து விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் வண்டலூர் பூங்காவில் அக்டோபர் 26 ஆம் தேதி 19 வயதான பெண் சிங்கம் உயிரிழந்தது. அந்த சிங்கம் வயது முதிர்வால் உடல்நலம் குன்றி அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் 5 நெருப்புக்கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. இதனை அடுத்து நெருப்பு கோழிகளை பார்ப்பதற்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து வண்டலூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, 19 வயதான கவிதா என்கிற பெண்சிங்கம் கடந்த 2 மாதத்திற்கு மேலாக வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தது. தொடர்ந்து மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி சிகிச்சை பலனின்றி வயது மூப்பு காரணமாக கவிதா என்ற பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது. ஆனால் நேற்று திடீரென்று காலை சில நெருப்பு கோழிகளுக்கு உடல் மோசமானது. இதனையடுத்து நெருப்புக் கோழிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அடுத்தடுத்து 5 நெருப்புக் கோழிகள் உயிரிழந்துள்ளன. இவற்றுக்கு வயது 1.5 வயது முதல் 3 வயது கூடிய நெருப்புக் கோழிகள் ஆகும்.
நெருப்பு பொறிகளை உடற்கூறு ஆய்வு செய்ததில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தும் மறு ஆய்வுக்காக மாதிரிகளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உணவின் காரணமாக நெருப்புக் கோழிகள் உயிரிழந்ததா என்பது குறித்தும் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பல்வேறு கோணங்களில் தற்பொழுது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது விசாரணை முடிவில் உரிய காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.