அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை செப்டம்பர் 15ஆம் தேதி அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரின்  காலை உணவுத் திட்டத்தின்ன்படி, 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கப்பட உள்ளது.


ஐந்தில் 3 மாணவர்கள் காலை உணவை உண்பதில்லை


சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு உடல், மன நலம் சார்ந்த விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஜூலை 27ஆம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''பள்ளி மாணவர்கள் காலை உணவை எப்போதும் தவற விடாதீர்கள். மாணவர்களிடம் நலன் பற்றி நான் தனியாக அவர்களிடம் உரையாடினேன். அப்போது ஐந்தில் 3 மாணவர்கள் காலை உணவை உண்ணவில்லை எனக் கூறினர். 


இதையடுத்து பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையில் கையெழுத்திட்டேன். அரசு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு இலவச காலைச் சிற்றுண்டி திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது'' எனத் தெரிவித்தார்.  


அதைத் தொடர்ந்து காலைச் சிற்றுண்டி திட்டத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. அதில் 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதற்கட்டமாகக் காலைச் சிற்றுண்டி திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் 


தமிழ்நாட்டில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ள நிலையில்,  காலை உணவு திட்டத்தை கண்காணிக்க மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டன. இதற்கான பொறுப்பு அதிகாரியாக அண்மையில் இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.




சிற்றுண்டித் திட்டத்தில் வழங்கப்படும் உணவுகள் 


* திங்கட்கிழமை - உப்புமா வகை ( ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார்)


* செவ்வாய்க் கிழமை - கிச்சடி வகை ( ரவா, சேமியா, சோள காய்கறி, கோதுமை ரவா கிச்சடி)


* புதன் கிழமை - பொங்கல் (வெண் பொங்கல், ரவா பொங்கல் உடன் காய்கறி சாம்பார்)


* வியாழக் கிழமை - உப்புமா வகை ( ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா, அரிசி உப்புமா உடன் காய்கறி சாம்பார்)


* வெள்ளிக் கிழமை - ஏதாவது ஒரு வகை கிச்சடி (ரவா, சேமியா, சோள காய்கறி, கோதுமை ரவா கிச்சடி) உடன் ரவா கேசரி, சேமியா கேசரி .


மேலும் வாசிக்க: TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி