அஞ்சல் ஆயுள் காப்பீடு அல்லது கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் தேர்வுக்கு நவம்பர் 25ஆம் தேதி சென்னையில் நேர்காணல் நடைபெறுகிறது.


இதுகுறித்து முன்னதாக சென்னை மத்தியக் கோட்டத்தின் முதுநிலை கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:


"முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்களை ஈடுபடுத்தவிருக்கிறது.


விருப்பமுள்ளவர்கள் கீழ்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 25.11.2022 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.


 தேவையான தகுதிகள்


கல்வித் தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை


பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.


தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.


இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.


மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன்(பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல், வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அனுகவும். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.


இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை / கமிஷன் மட்டுமே வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் முன்னதாக தஞ்சாவூர்,  பட்டுக்கோட்டை கோட்டத்தில் நடைபெறும் தபால் காப்பீட்டுத் திட்ட சிறப்பு முகாம்  குறித்து அறிவிப்பு வெளியானது.


பட்டுக்கோட்டை தபால் கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து தலைமை, துணை, கிளை தபால் நிலையங்களில் தபால் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கான சிறப்பு முகாம் நவம்பர் 9, நவ.10, நவம்பர் 23, 24ஆகிய தேதிகளில் நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.


தபால் ஆயுள் காப்பீட்டுத் திட்டமானது மத்திய அரசு நேரடியாக தபால் துறை மூலம் நடத்தும் திட்டமாகும். இதில் குறைவான ப்ரீமியம் வசூலிக்கப்பட்டு அதிக போனஸ் வழங்கப்படுகிறது.


இத்திட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், பதிவு பெற்ற நிறுவன ஊழியர்கள், நிகர்நிலை பல்கலைக்கழக ஊழியர்கள், அரசு, தனியார் மருத்துவமனை ஊழியர்கள், தேசிய பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவன ஊழியர்கள், மருத்துவர்கள், என்ஜினீயர்கள், மென்பொருள் வல்லுநர்கள் உள்ளிட்டோர் சேரலாம்.


இதையும் படிங்க: மதுரா தொகுதியில் ராதையாக மாறிய ஹேமமாலினி... 74 வயதிலும் அழகிய நடனம்... இதயங்களை அள்ளி வழங்கும் நெட்டிசன்கள்!