'ட்ரீம் கேர்ள்' என முதன்முதலாக நாடு முழுவதும் ஒரு சேர கொண்டாடப்பட்ட ஒரு நடிகை என்றால் அவர் ஹேமமாலினி. தமிழ்நாட்டில் பிறந்த பாலிவுட் சென்று கோலோச்சி கனவுக்கன்னியாக உருவெடுத்த ஹேமமாலினி, 70களில் நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் இதயங்களையும் வென்றெடுத்தார்.


திருச்சியில் 1948ஆம் ஆண்டு பிறந்த ஹேமமாலினி முதலில் கோலிவுட்டில் ’இது சத்தியம்’ எனும் படத்தில் அறிமுகமானார். பின்னர் தெலுங்கு சினிமாவுக்கு சென்ற அவர், ‘சப்னோ கா சௌதாகர்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.




தொடர்ந்து பாலிவுட்டில் டாப் ஸ்டாராக உருவெடுத்த ஹேமமாலினி, 1977ஆம் ஆண்டு நடித்த ‘ட்ரீம் கேர்ள்’ எனும் பட்த்துக்குப் பிறகு இந்தியாவின் கனவுக்கன்னியாகவே கொண்டாடப்பட்டார்.


நடிகர் தர்மேந்திராவுடன் பல படங்களில் நடித்த ஹேமமாலினி அவருடன் காதல் வயப்பட்டு, 1980ஆம் ஆண்டு அவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த ஹேமமாலினி, பின்னர் பாஜகவில் இணைந்து தற்போது மதுரா தொகுதி மக்களவை உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.


2014, 2019ஆம் ஆண்டு தேர்தல்களில் பா.ஜ.க.வின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றான மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ஹேமமாலினி


தற்போது 74 வயதாகும் ஹேமமாலினி அடிப்படையில் ஒரு சிறந்த பரதநாட்டியக் கலைஞராவார். சினிமா தொடங்கி மேடை நிகழ்ச்சிகள் வரை தொடர்ந்து பரதநாட்டியம் மீதான தன் காதலை வெளிப்படுத்தி வருகிறார்.


அந்த வகையில், நேற்று (நவ.10) தனது மதுரா தொகுதியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் ஹேமமாலினி பங்கேற்று மேடையில் நடனமாடி அசத்தியுள்ளார்.


வடமாநிலங்களில் கொண்டாடப்படும் கார்த்திக் பூர்ணிமா விழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் கிருஷ்ணர் போன்று வேடமணிந்த நடிகர் ஒருவருடன் இணைந்து ராதையாக மாறி ஹேமமாலினி புரிந்த நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.






முன்னதாக இந்நிகழ்வு குறித்த புகைப்படங்களை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ஜெய்ஸ்ரீ கிருஷ்ணா, ராதா’ எனப் பதிவிட்டுள்ளார் ஹேமமாலினி. இந்தப் புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்களை இதயங்களை அள்ளி வழங்கியும், ’74 வயதிலும் இவ்வளவு சிறப்பாக பெர்ஃபார்ம் செய்கிறார்’ என கமெண்ட் செய்தும் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.


 






மற்றொரு புறம் கடந்த எட்டு ஆண்டுகளில் ஹேம மாலினி மதுரா தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை, நடனம் மட்டுமே ஆடுகிறார் என அங்கலாய்த்தும் வருகின்றனர் நெட்டிசன்கள்!