செல்லப்பிராணிகளுக்கு ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், எப்படி உரிமம் பெறுவது குறித்த வழிகாட்டுதல்களை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சிறுமியை தாக்கிய நாய்கள்:
சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சார்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு, தாக்கி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்த ஒரு சம்பவம் மக்களுக்கு மிகுந்த மன வருத்தத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தையடுத்து, நாய் வளர்ப்பு குறித்தான பேச்சுக்கள் அதிகம் எழ ஆரம்பித்தன. மேலும் சில மாதங்களுக்கு முன்பு, மத்திய அரசு வெளியிட்டுள்ள அயல்நாட்டு ரக நாய் வளர்ப்புக்கான விதிமுறைகள் நினைவு கூறப்பட்டது. இதில் 23 நாய்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்திருந்ததை பார்க்க முடிந்தது.
உரிமம் பெறுவது எப்படி?:
இந்நிலையில், சென்னையில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர்கள், ஆண்டுதோறும் உரிமம் பெற வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. உரிமம் பெற https://www.chennaicorporation.gov.in/ என்ற இணையத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது
- சென்னை மாநகராட்சி குறிப்பிட்டுள்ள, இந்த புகைப்படத்தில் உள்ள க்யூ. ஆர் கோர்டை ஸ்கேன் செய்யவும்.
3. உங்களது பெயர் மற்றும் முகவரி, உரிமையாளர் புகைப்படம், செல்லப்பிராணி புகைப்படம் உள்ளிட்ட கேட்கப்படும் விவரங்களை உள்ளீடு செய்யவும்.
மத்திய அரசின் விதிகள்:
மத்திய அரசு 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய்கள்
பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் என பொதுவாக அழைக்கப்படும் வகைகள், மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் தடை:
- இந்த நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்கள் இறக்குமதி செய்வதற்கு தடை
- இனப்பெருக்கம் செய்வதற்கு தடை
- வளர்ப்பு பிராணிகளாக விற்பனைக்கு தடை
- தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர், அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்..