சென்னையில் அமைந்துள்ள முக்கியமான மகளிர் கல்லூரிகளில் ஒன்று எம். ஓ. பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி. கடந்த 1992ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரி தரத்தின் ரீதியாகவும் மாணவிகளின் எண்ணிக்கை ரீதியாகவும் மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.


மாணவிகளை மேம்படுத்துவதில் இந்த கல்லாரி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்லூரி தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே, இந்த கல்லூரிக்கு தன்னாட்சி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழுவும் சென்னை பல்கலைக்கழகமும் வழங்கியது.


இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கல்லூரியின் தொடர்பியல் மற்றும் ஊடகத்துறை ஆண்டுக்கு ஒரு முறை INSPIRE என்ற பெயரில் சர்வதேச மாநாட்டினை நடத்தி வருகிறது.


அதன்படி, தொடர்பியல் மற்றும் ஊடகத்துறையின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கும் சர்வதேச மாநாடு, இந்தாண்டு பிப்ரவரி 3 மற்றும் 4 தேதிகளில் நடைபெறுகிறது.


ஊடகத்துறையில் மாறி வரும் சூழலில் பெண்களின் வாய்ப்புகள், கருத்தாக்கம், சவால்கள் என்ற தலைப்பில் இந்தாண்டுக்கான சர்வதேச மாநாடு நடைபெறுகிறது.


இதில், ஆய்வறிஞர்கள், கல்வித்துறை விஞ்ஞானிகள் என பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் பெண்கள் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். விழாவின் சிறப்பு விருந்தினராக தென்னிந்தியாவுக்கான ஆஸ்திரேலிய நாட்டு தூதர் சாரா கிர்லேவ் கலந்து கொள்கிறார்.


கவிதாலயா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் புஷ்பா கந்தசுவாமி கௌரவ விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.


JFW இதழின் இணை நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பினா சுஜித், தொகுப்பாளரும் நடிகருமான அர்ச்சனா சந்தோக் ஆகியோரும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர்.


நியூயார்க் நகர தொழில்நுட்பக் கல்லூரி, பால் ஸ்டேட் பல்கலைக்கழகம் மற்றும் அமீரங்களில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர்.


திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குநருமான கிருத்திகா உதயநிதி, நடிகையும் தொகுப்பாளருமான அர்ச்சனா, தொகுப்பாளர் ரம்யா, திரைப்பட நடிகை கீர்த்தி பாண்டியன், பத்திரிகையாளர் அக்சயா நாத் உள்ளிட்டவர்களும் உரை நிகழ்த்த உள்ளனர்.


நடிகை அனுபமா குமார், பத்திரிகையாளர்கள் வசந்தி ஹரிபிரகாஷ், அகிலா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டவர்களும் சர்வதேச மாநாட்டில் உரை நிகழ்த்த உள்ளனர்.