காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள ஃபாக்ஸ்கான்  நிறுவன வளாகத்தில் இயங்கி வரும் பாரத் எஃப் ஐ எச் லிமிடெட் ( Bharat FIH limited) என்ற நிறுவனத்தில் அதிக வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


 




தமிழகத்தில் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம்,ஒரகடம் பகுதியில் இயங்கி வரும் தொழிற்பேட்டையில் ஆட்டோமொபைல்,செல்போன்,இருசக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு விதமான உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஏராளமான சர்வதேச முன்னணி  தொழிற்சாலை நிறுவனங்களின் தொழிற்சாலைகள்  இயங்கி வருகிறது.


 




அவ்வகையில்  சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் பிரபல செல்போன் தயாரிக்கும் நிறுவனமான ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை நிறுவன வளாகத்தில் சாம்சங், ஒப்போ, எம்.ஐ, ஐபோன்,விவோ  உள்ளிட பல்வேறு  நிறுவனங்களின் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவனங்கள் தனி தனியாக  செயல்பட்டு வருகிறது. இதில் எம்.ஐ செல்ஃபோனிற்கு உதிரி பாகங்களை தயாரிக்கும் மற்றொரு தனியார் தொழில்சாலை நிறுவனமான  பாரத் எஃப் ஐ எச் லிமிடெட் ( Bharat FIH limited) என்ற நிறுவனம் கடந்த 2015 ஆண்டு முதல் இயங்கி வருகிறது.


இந்நிலையில் இந்நிறுவனத்தில் இன்று திடீரென சென்னையில் இருந்து வந்த  வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக தொடர்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இந்நிறுவனம் அதிக வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஐந்து  மணி நேரத்திற்கும் மேலாக அங்கு தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.மேலும் இச்சோதனையில்  வரி ஏய்ப்பு தொடர்பாக பல முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்பு உள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பாக்ஸ்கான் தொழிற்சாலை நிறுவன வளாகத்தில் உள்ள மற்றொரு நிறுவனத்தில் திடீரென  வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில நாட்களுக்கு முன்பு பாக்ஸ்கான் தொழிலாளா்கள் தங்கியுள்ள உணவு விடுதியில் தரமற்ற உணவு வழங்கிய நபா்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  மூவாயிரத்திற்கும்  மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் சுங்குவார்சத்திரம்  அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு தொடங்கி 17 மணி நேரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பின்னர் பலக்கட்ட பேச்சுவார்த்தைக்கு 
பின்னர் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.