குன்றத்தூர் பிரியாணி அபிராமிக்கு அவ்வளவாக அறிமுகம் தேவை இருக்காது. தகாத நட்புக்காக பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தைகளை கொன்றதாக குற்ற வழக்கில் சிறை சென்றவர். சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை அங்கனீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவரது மனைவி அபிராமி (25). தம்பதிக்கு அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.


அபிராமிக்கும், பிரபல பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் (25) என்பவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இது இருவீட்டாருக்கும் தெரிந்த காரணத்தால் இருவரையும் கண்டித்துள்ளனர். இருப்பினும் கள்ளக்காதல் கண்ணை மறைத்த காரணத்தால், இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தாய் அபிராமி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம்  செப்டம்பர் மாதம் 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தற்போது சென்னை புழல் சிறையில் இருக்கும் அபிராமி வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை இவ்வழக்கில் அபிராமியின் உறவினர்கள் உட்பட 22 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 21-பேரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் நிறைவேறியுள்ளது. மேலும் ஒரு சாட்சியின் மீது விசாரணையும், வழக்கின் மீதான வாதமும் நடைபெற உள்ளதால், இந்த வழக்கு நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. இதனால் பிரியாணி அபிராமியின் வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

இந்நிலையில் அபிராமியின் சகோதரர் 27 வயதான பிரசன்ன மணிகண்டன் மாங்காட்டை அடுத்த பெரிய பணிச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் பெரம்பூரில் வசித்து வந்த வேலூரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவர் நீண்ட நேரமாக யாருடனோ செல்போனில் சண்டை போட்டு வந்ததாக தெரிகின்றது.


 

இந்நிலையில் இரவு நேரத்தில் தனது அறைக்கு சென்றவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாங்காடு போலீசார் சடலத்தை கைப்பற்றி  விசாரணை மேற்கொண்டனர். பெற்றோர் மற்றும் உறவினரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ,மணிகண்டன் சில ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், இதுபற்றி அறிந்த இரு தரப்பு பெற்றோர் இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது


கடந்த சில தினங்களுக்கு முன் இவர்களுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில் அபிராமி விவகாரம் இளம்பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடுகளை நிறுத்தியுள்ளனர். அந்த இளம் பெண்ணும் பிரசன்னாவின் தொடர்பைத் துண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசன்னா நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாங்காடு போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 


வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் என்ன பிரச்சனைகளை சந்தித்தாலும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் ஏற்பட்டாலோ உளவியல் நிபுணர்களை நாடுங்கள். தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்க்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050