காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்த செவிலியர் உயிரிழந்துள்ளார். மரணப்படுக்கையிலும் மாண்டு போகாது சேவை மனப்பான்மை . உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சக நோயாளிக்கு படுக்கையை விட்டுக் கொடுத்து செவியலிர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 9-வது மண்டலத்தில் உள்ள துணை பெருநகர மருத்துவமனையில் நகர சுகாதார செவிலியராக பணியாற்றி வந்த பவானி என்பவருக்கு கடந்த ஏப்ரல் 22 அன்று கொரோனா தொற்று ஏற்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஐந்து நாட்கள் மட்டும் சிகிச்சையளித்துவிட்டு ஏப்ரல் 26 அன்று டிஸ்சார்ஜ் செய்தது மருத்துவமனை நிர்வாகம், 

 


 

பின்னர், உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்துவிட்ட நிலையில் ஏப்ரல் 28ம் தேதி மீண்டும் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது ஆக்சிஜன் படுக்கை கிடைக்காமல் மிகவும் சிரமப்பட்டு  பவானியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். "80 சதவீத நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது. காப்பாற்றுவது மிகமிக கடினம். இருப்பினும் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்" என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 


 

அதன்படி சிகிச்சையும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து படிப்படியாக உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. ஓரளவிற்கு உடல்நலம் தேறிய நிலையில், உயிருக்கே மிக ஆபத்தான நிலையில் பலர் படுக்கை கிடைக்காமல் மருத்துவமனைக்கு வெளியே உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதையும், அவர்களுக்கு உரிய மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்பதை அறிந்த பவானி,  தனக்கு கிடைத்த ஆக்சிஜன் படுக்கையை விட்டுக் கொடுத்து விட்டு கடந்த மே 12ம் தேதி வீட்டிற்கு வந்து  தனிமைப்படுத்தி வந்துள்ளார்.


 

தொடர்ந்து , அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் , திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடந்த 19 ஆம் தேதி உயிரிழந்தார். பவானியின் கணவர் கஜேந்திரன் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர். இவரும் கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

 

செவியலிர் பவானி கஜேந்திரன், தனது திருமண நாளன்று உயிரிழந்தது அந்த கிராமத்தையே ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது . முன்கள பணியாளரான செவிலியர் பவானி கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்ததை தொடர்ந்து அவருடைய மகனுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும். இவருக்கு தேவையான உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

 


 

கொரோனா மரணப்படுக்கையிலும்  சேவை மனப்பான்மையுடன் அடுத்தவருக்கு படுக்கையை விட்டுக்கொடுத்த செவிலியரின் செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்தில் பல செவிலியர்கள் தங்கள் இன்னுயிர் நீத்து, பலரை காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.