முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்பதற்கு மூன்று நாள்கள் முன்னரே கொரோனா ஒழிப்பு இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என அழைப்புவிடுத்தார். கடந்த 11ஆம் தேதி  சட்டப்பேரவையில், கொரோனாவின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்க அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும் என்றார்.  


அவர் கேட்டுக்கொண்டபடி அனைத்து கட்சிகளும் ஜரூராக களத்தில் இறங்கினார்களா என்பது கேள்வியாக இருக்க, முதலமைச்சரின் கொளத்தூர் தொகுதியில் கொரோனா உதவி மையம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதைச் செய்திருப்பது, அந்தப் பகுதியின் சிபிஐ-எம் கட்சிக் குழு.  




இந்த கொளத்தூர் பகுதி மக்கள் கோவிட் உதவி மையம் மூலம், மருத்துவ ஆலோசனையும் கொரோனா பற்றிய பொதுவான மருத்துவ அறிவியல் விளக்கமும் அளிக்கப்படுகிறது. மருத்துவர் பரிந்துரைப்படி வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்குத் தேவையான உதவிசெய்வது, மருத்துவமனைக்குச் செல்வதற்கு இலவச ஆட்டோ வசதி, தடுப்பூசி மையங்கள், மருத்துவமனைகள் பற்றிய விவரம் அளிப்பதிலும் இந்தக் குழுவினர் ஈடுபடுகின்றனர்.  ஒரு வாரத்துக்கும் மேலாக இந்தக் குழுவினர் நாள் முழுவதும் மும்முரமாகச் செயல்பட்டுவருகின்றனர்.




கடந்த ஆண்டும் இதே கோடைப் பருவத்தில், கொரோனா முதல் அலையின்போது இவர்கள் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்த ஓமியோபதி மருந்தை, ஒரு லட்சம் குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தனர். அதைப்போலவே இரண்டாவது அலைக் கட்டத்திலும் தடுப்பு மருந்துகளையும் எதிர்ப்புசக்தியை உண்டாக்கும் மருந்துகளையும் வழங்கிவருகின்றனர்.

கொளத்தூர் பகுதி சிபிஎம் செயலாளர் ஹேமாவதியிடம் பேசியபோது,
“கொரோனா பேரிடரில் மக்களுக்கு உதவும்பணியில் ஈடுபடுமாறு எங்கள் கட்சித் தலைமை அறிவித்ததும், எங்கள் பகுதியில் வேலையில் இறங்கிவிட்டோம். வாழ்வாதாரத்தை இழந்ததுடன் குடும்பத்தினரை இழந்து நிற்கும் உழைக்கும் மக்களின் துயரம், பெரும் வேதனையைத் தருகிறது. முடிந்த அளவுக்கு வரும்முன் காப்பதற்கான முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். கணிசமானவர்கள் நெருக்கடி வரும்போது மருத்துவமனைக்குப் போகின்றனர். அவர்களின் சந்தேகங்கள், தயக்கங்களைத் தீர்த்துவைத்தால்தான் தெளிவான முடிவுக்கு வருவார்கள். உரிய நேரத்தில் சிகிச்சை எடுக்காமல் உயிராபத்தைச் சந்திப்பது எவ்வளவு கொடுமை!” என நம்மையும் உச் கொட்டவைத்தார்.




” சிகிச்சை பயம் இருக்கிறது. தடுப்பூசி பற்றியும் அதிகமாக கேட்கிறார்கள். கர்ப்பினி ஒருவரின் கணவர் பேசினார். அவருக்கு தடுப்பூசி போடவில்லை. அதனால் தொற்று வந்துவிடுமோ என அதிகமாக பயப்படுகிறார்; அவருக்கு கவுன்சிலிங் தரமுடியுமா என பதற்றத்துடன் கேட்டார். அந்தப் பெண்ணுக்கு எங்கள் மருத்துவர் பேசி, பயத்தைப் போக்கினார். கொரோனா சிகிச்சையில் இருந்த ஒருவரை சிகிச்சை முடிந்தது என வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். அவருக்கு அதிக இருமல்.. எங்களின் ஓமியோபதி மருத்துவர் பாலமுருகன் சிகிச்சை அளித்து, மூன்று நாள்களில் குணமானது. தடுப்பூசி ஒவ்வாமை, சிடிஸ்கேன் எடுத்தால் பாதகமா என்பன போன்ற கேளவிகளுக்கு, சதீஷ் முதலிய மருத்துவர்கள் விளக்கமாக பதில்சொல்கிறார்கள்.” என சிறு திருப்தியடைந்தவராகப் பேசினார், ஹேமா.

திரைப்படப் பாடலாசிரியர் குட்டி ரேவதி, பிரியங்கா ஆகிய சித்த மருத்துவர்களும் இவர்களுடன் கைகோர்த்துள்ளனர். கடந்த 21ஆம் தேதியன்று சித்த மருத்துவம் பற்றி வீடுவீடாகப் போய் இரண்டு மருத்துவர்களும் மக்களின் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தனர். சப்போட்டா போன்ற இனிப்பு பழங்களை இந்தக் கட்டத்தில் உட்கொள்ளக்கூடாது; கொரோனா காலத்துக்கான கஞ்சி போன்ற உணவுகளைத் தயாரிக்கும் முறையையும் எடுத்துக்கூறியதை பகுதிவாசிகள் கவனமாகக் கேட்டனர்.

நிலவேம்புக் குடிநீர், கபசுரக் குடிநீர், நொச்சிக் குடிநீர், ஆடாதொடைக் குடிநீர், ஓமக்குடிநீர், அமுக்கரா சூரணம், தாளிசாதி சூரணம், அதிமதுர சூரணம், பிரமானந்த பைரவம், சுவாசகுதோரி மாத்திரை, பவளப் பற்பம், மகாபூபதி பற்பம், மால்தேவி செந்தூரம், செம்பு பற்பம் என விதம்விதமான மருந்துகளைப் பற்றியும் சித்த மருத்துவர்கள் எடுத்துக்கூறினார்கள். இந்தப் பணியில், இவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியான சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.




ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுவிட்டார். சிறப்புக் குழந்தையுடன் வீட்டில் இருந்த அவரின் மனைவிக்கும் தொற்று ஏற்பட, அந்த சிறப்புக் குழந்தையைப் பராமரிக்க யாரும் இல்லை. உதவி மையத்துக்கு உதவிகேட்டு அழைப்புவர, அந்தக் குழந்தையை ஹேமாவே தன்னுடன் வைத்துக்கொண்டார். மூன்று நாள்கள் அவருடன் இருந்த அந்த சிறப்புக் குழந்தை, அவளுடைய தாய் சிகிச்சையிலிருந்து திரும்பியதும் வீட்டுக்குச் சென்றுவிட்டாள். தாயும் தந்தையும் நெக்குருகிப் போனார்கள்.