செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக ராகுல் நாத் பணியாற்றி வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு, முன்பு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் புகைப்படத்தை எடுத்து மர்ம நபர் ஒருவர் ஃபேஸ்புக்கில் போலி கணக்கு உருவாக்கி,  செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியரின் நண்பர்களிடம் பணம்  கேட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அவர்களுடைய நண்பர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், உடனடியாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தன்னுடைய பெயரில், போலி கணக்கு ஒன்றை துவங்கி தன்னுடைய நண்பர்களிடம், பணம் கேட்கிறார்கள் என செங்கல்பட்டு சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் சம்பந்தப்பட்ட போலி கணக்கில் லிங்க் மற்றும்  ஸ்க்ரீன் ஷாட் உள்ளிட்டவற்றை பகிர்ந்தார்.




இது தொடர்பாக புகாரை பெற்றுக்கொண்ட செங்கல்பட்டு சைபர் கிரைம் காவல்துறையினர் 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் சிவகுமார், காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் தலைமையில், காவலர்கள்  சுதாகர், குருநாதர், சங்கர் ,சிவா, கலைவாணன், ஆகியோர் அடங்கிய காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் போலி கணக்கை பயன்படுத்திய நபரின் அடையாளத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.




 


காவல்துறை நடத்திய விசாரணையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்ததால், காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படை அமைத்து ராஜஸ்தான் மாநிலம் சென்று முகமத் ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்பவரை கைது செய்தனர். இச்செயலில் ஈடுபட்டவர் சிறுவர் என்பதும், பத்தாம் வகுப்பு படித்து வருவதும் காவல்துறை நடந்த விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து பரத்பூர் மாவட்ட இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இன்று செங்கல்பட்டு மாவட்ட குழுமத்திலும் ஆஜர்படுத்தியும் செங்கல்பட்டு கூர் நோக்கு இல்ல பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். குற்றவாளியை கைது செய்த காவல் இருக்கு செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுகளை தெரிவித்தார்.




இது தொடர்பாக காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் பெண்கள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர வேண்டாம். இதுபோல் எவரேனும் ஃபேஸ்புக், மெசஞ்சர் மூலம் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் கூகுளே, அல்லது வேறு . ஏதாவது இணையதளம் மூலம் மிகவும் அவசரம் என பணம் கேட்டால் பணத்தை அனுப்ப வேண்டாம் என்று செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.