சென்னையின் மிக முக்கியமான அடையாளம் மீனம்பாக்கம் விமானநிலையம். சர்வதேச அளவில் மிக முக்கியமான விமான நிலையங்களில் இதுவும் ஒன்று. இந்திய அளவில் மும்பை, டெல்லி ஆகிய இரண்டு விமான நிலையங்களை அடுத்ததாக இது கருதப்படுகிறது. உள்நாட்டு விமான நிலையம், பன்னாட்டு விமானநிலையம் என இரு பிரிவுகளைக் கொண்டு இங்கிருந்து விமானங்கள் இயக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று எதிரொலி காரணமாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது, குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் அங்கிருந்து ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, போன்ற பிற நாடுகளுக்கு பயணம் செய்யும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு விரைவாக பயணம் செய்ய உதவி செய்யும் வண்ணம் தற்போது சென்னை சர்வதேச விமான நிலையத்தில் 30 நிமிடங்களில் விரைவாக கொரோனா ரிசல்ட் சொல்லும் ஆர்டி-பிசிஆர் சோதனை மையம் துவங்கியது.
விரைவாக பரிசோதனை செய்வதற்கு விமான நிலைய ஆணையம் கடந்த ஜூலை 27 ஆம் தேதி, இது தொடர்பாக தமிழக அரசிடம் அனுமதி பெற்றுள்ளது. மேலும் சென்னை விமான நிலையம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அனுமதியையும் பெற்றுள்ளது. முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தமிழக நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறுகையில் சில நாட்களில் இந்த மையம் தனது செயல் படுத்துவோம் என தெரிவித்திருந்தார் . அந்த வகையில் தற்போது 30 நிமிடங்களில் பரிசோதனை செய்து முடிவை அறிவிக்கும் மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சில நாடுகளுக்கு செல்லும் பயணிகளும் சில மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை கேட்பதால், இந்த விரைவாக எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் மிக உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அரசு சார்பில் எடுக்கப்படும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு குறைந்தது 20 மணி நேரத்திற்கு மேல் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் டாக்டர் சதீஷ் கூறுகையில், இந்த பரிசோதனை வசதி வெளிநாடுக செல்வோருக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். ஏனென்றால் சில நாடுகள், பயணிகளிடம்,சமீபத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளை கேட்கின்றன. வெளிநாடுகளுக்கு செல்வோர் விமான நிலையத்தில் இந்த பரிசோதனையை செய்து சான்றிதழைப் பெற்றுக் கொண்டால் அந்த நாடுகளில் இதை காட்டி எளிதாக பயணம் செய்யலாம். இது டி-30 என்று அழைக்கப்படுகிறது. பயணிகள் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் தரப்பட்டிருக்க வேண்டும். ஐக்கிய அரபு அமீரகம் உட்பட சில நாடுகள் இதை கட்டாயம் கோருகின்றன. இது பயணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவித்தார்.
சென்னையில் கொரோனா பரவல், அதிகரித்து வருவதால் தி.நகர், தாம்பரம் உள்ளிட்ட 9 பகுதிகளில் உள்ள கடைகளை மூடுவதற்கு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மூன்றாம் அலையை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனவே விரைவில் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தை பயன்படுத்தும், அனைத்து விதமான பயணிகளும் நிச்சயம் கொரோனா பரிசோதனை எடுத்தாக வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகலாம், அதற்கு இந்த பரிசோதனையை மிகவும் உறுதுணையாக இருக்கும் என கூறப்படுகிறது.