செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ளது கருநீலம் கிராமத்தில் வசித்து வருபவர் டில்லிபாபு. இவரது மகள் மகேஸ்வரி 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மகேஸ்வரி தந்தை டில்லிபாபு உடல்நிலை குறைவால் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் குணமடைந்தால் குலதெய்வ கோவிலுக்கு கடா வெட்டி பொங்கல் வைத்து ஊர் விருந்து வைப்பதாக, தங்களது குல தெய்வமான சிறுகுன்றம் அம்மன் கோவிலுக்கு டில்லிபாபுவின் மனைவி மற்றும் குடும்பத்தினர் வேண்டிக்கொண்டனர்.
மருத்துவமனையில் அனுமதிருந்த டில்லிபாபு பல லட்ச ரூபாய் செலவு செய்து சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து கடவுளிடம் வேண்டியபடி ஆடி மாதம் என்பதால் குல தெய்வத்திற்கு ஆட்டு கடா வெட்டி படையல் போடுவதற்கு, குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இதன் காரணமாக சாமிக்கு நேர்ந்துவிட்ட ஆட்டை வெட்டி வேண்டுதலை நிறைவேற்ற தயாராகினர்கள்.
இந்நிலையில் டில்லிபாபு மகள் மகேஸ்வரி தான் செல்லமாக வளர்த்து ஆட்டை வெட்ட வேண்டாம், என பலமுறை பெற்றோர்களிடம் கூறியுள்ளார், இருந்தும் பெற்றோர்கள், இது கடவுளுக்காக நேர்ந்துவிடப்பட்ட ஆடு அதை பலி கொடுக்காமல் விட்டால், தெய்வ குத்தம் ஆகிவிடும் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆட்டை மீட்டெடுக்க மகேஸ்வரிக்கு வேறு வழியின்றி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் அவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் புகாரினை அளித்தார் .
இதனைத் தொடர்ந்து மின்னஞ்சல் மூலம் மாணவி மகேஸ்வரி அளித்த புகாரினை பார்த்த, மாவட்ட ஆட்சியர் கால்நடைத்துறை மூலமாக அந்த ஆட்டை மீட்டெடுக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கால்நடைத்துறை அதிகாரிகள் மகேஸ்வரியின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி ஆட்டை வெட்ட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி ஆட்டை பலி கொடுக்கும் முடிவை கைவிட்டுள்ளனர். அதற்கு பதிலாக அந்த ஆடு சிறுகுன்றம் கங்கை அம்மன் கோயிலுக்கு உயிருடன் கோவிலுக்கு அர்ப்பணித்துள்ளனர். இதன் காரணமாக மாணவி மகேஸ்வரி அளவு கடந்த சந்தோஷமாக உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் .விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கு மாணவி மகேஸ்வரி நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து புகார் அளித்த மாணவி மகேஸ்வரி கூறுகையில், ”சின்ன வயதில் இருந்தே அந்த ஆட்டை நான் ஆசையாக வளர்த்து வந்தேன். அது எப்போதும் என்னுடன் தான் விளையாடிக் கொண்டிருக்கும், இரவில் மட்டுமே அது அதன் அம்மாவிடம் சென்று தூங்கும். மற்ற நேரங்களில் என்னுடன் தான் இருக்கும். வீட்டில் எவ்வளவு சொல்லியும் ஆட்டை வெட்டுவதில், எங்கள் வீட்டில் இருந்தவர்கள் குறியாக இருந்தார்கள். அதனால் எனக்கு வேறு வழி இல்லாமல் இது குறித்து ஆட்சியரிடம் இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தேன். உடனடியாக அந்த மனுவில் பார்த்த மாவட்ட ஆட்சியர் 24 மணிநேரத்தில் கால்நடை ஊழியர்களை அனுப்பி ஆட்டை மீட்டனர். தற்பொழுது அந்த ஆடு உயிரோடு இருப்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தார்.
ஆட்டை காப்பாற்றுவதற்காக மின்னஞ்சலில், வந்த செய்தியைப் பார்த்து உடனடியாக அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது