கரும்பு என்று கூறியவுடன் நமக்கெல்லாம் இனிப்பு ஞாபகம் வரும், ஆனால்  விவசாயிகளுக்கோ கரும்பு என்ற சொல் எப்போதுமே கசப்புதான். குறிப்பாக கரும்பை பயிரிட்டு விட்டு விவசாயிகள் அக்கரும்பை வெட்டுவதற்கு சர்க்கரை ஆலையில் இருந்து அனுமதி வரும் வரை காத்திருக்க வேண்டும். சரியான கால கட்டத்தில் கரும்பை  வெட்ட அனுமதி வரவில்லை என்றால் கரும்பின் எடை குறைந்துவிடும். பல விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் கரும்பை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும் முறையாக சர்க்கரை ஆலையில் இருந்து கரும்புக்கான பணம் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதேபோல கரும்புக்கான விலையை உயர்த்த வேண்டும் என்று, விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து பல போராட்டங்கள் நடத்தி வருகின்றனர், இருந்தும் விவசாயிகள் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படாமல் உள்ளது.



 

செங்கல்பட்டு அடுத்த பொன் விளைந்த களத்தூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டனுக்கு (31) ரதிதேவி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். மகேந்திரா சிட்டியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மணிகண்டன் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தனது மனைவி  ரதிதேவியின் தந்தைக்கு  சொந்தமான 3 ஏக்கர் விவசாய நிலம் செங்கல்பட்டு அருகே உள்ள பிலாப்பூரில் உள்ளது. வேலை இல்லாமல் இருந்த மணிகண்டன் 3 லட்சம் வரை கடன் வாங்கி தனது மாமனாருக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ளார். 



 

சாகுபடி செய்த கரும்பை படாளத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய நிலையில், அதற்கான நிலுவை தொகை 6 மாதங்களாக சர்கரை ஆலை நிர்வாகம் கொடுக்கவில்லை. மேலும் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்பி கேட்க தொடங்கியதால் உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது கணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து இதுகுறித்து அவரது மனைவி ரதிதேவி படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


 

 

சம்பவம் தொடர்பாக தற்கொலை செய்துகொண்ட மணிகண்டனின் மனைவி ரதிதேவி கூறுகையில், கரும்பு பயிர் இடுவதற்காக ஊரில் சொந்தங்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் லட்சக்கணக்கில் கடன் பெற்றோம். கரும்பு வெட்டி முடித்தவுடன் வாங்கிய கடனை திருப்பி செலுத்தி விடலாம் என்று நினைத்திருந்தோம். ஆறுமாதம் காலமாகியும்  சர்க்கரை ஆலையில் இருந்து பணம் வரவில்லை. கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக என்னுடைய கணவர் வேலை இல்லாமல் தவித்து வந்தார். இதன் காரணமாக குடும்பம் மிக வறுமையில் வாடியது. இந்நிலையில் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் என்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.



 

கரும்பு ஆலையில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை வராத காரணத்தினால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் வேதனையை  ஏற்படுத்தியுள்ளது.