”ஏரி என்றால் மழை நீரால் நிரம்பும் நீர்ப்பாசனத் தொட்டி. மழைகாலத்தில் ஏரிகள் நிரம்பும். நீங்கள் ஏரிக்குள் வீடு கட்டியிருந்தால் உங்கள் வீடும் நிரம்பும். அதை நீங்கள் வெள்ளம் என்று சொல்லக்கூடாது. மழை நீருக்கு சிஎம்டிஏ ஒப்புதல் எல்லாம் தெரியுமா?” என்று ட்வீட் செய்துள்ளார் சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம்.


சென்னையில் கடந்த சனிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஓராண்டு சராசரி மழையை வடகிழக்குப் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே சென்னை பெற்றுவிட்டது. 


சென்னையில் நாளையும், நாளை மறு நாளும் அதி கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வும் மையம் ரெட் அலெர்ட் விடுத்துள்ளது. ஏற்கெனவே பெய்த மழையின் தேங்கிய நீரே இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. இதில் இன்னும் மழையா என்று மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.


கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டபோது ஒட்டுமொத்த சென்னையும் தத்தளித்தது. அதுபோன்றதொரு நிலை தற்போதும் ஏற்படுமோ என்ற அச்சம் உள்ளது.


கடந்த பெருவெள்ளத்தைத் தொடர்ந்து அதற்கான காரணங்களை விளக்கிய நிபுணர்கள், நீர்நிலை ஆக்கிரமிப்பையே முக்கியக் காரணமாகக் கூறினர். நீர்வழித் தடங்களை ஆறு, ஏரிகள் மறப்பதில்லை. அதனால் மழைக் காலத்தில் நீரின் ஓட்டம் அந்த வழியாகவே அமைகிறது. ஆனால், அந்த வழியில் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால் அப்புறம் மழை நீர் அந்தப் பகுதிகளிலேயே தேங்குவது இயல்பு தானே.


அதைத்தான், சூழலியல் ஆர்வலர் நித்யானந்த் ஜெயராம் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டு வரைபடங்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஒன்று வேளச்சேரியின் பழைய படம். இன்னொன்று வேளச்சேரியின் தற்போதைய படம். முதல் படத்தில் வேளச்சேரி ஏரி தனது முழு கொள்ளளவுடன் இருப்பதைக் காண முடிகிறது. இரண்டாவது படத்தில் வேளச்சேரி ஏரியில் கிட்டத்தட்ட 90 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகள், கட்டிடங்கள் உள்ளன. அதைப் பார்க்கும் போது மனதில் குற்ற உணர்ச்சி மேலோங்கினால் நீங்கள் இன்னும் மனிதராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
எவ்வளவு பெரிய ஏரியை ஆக்கிரமித்து கட்டிடங்களாக நிரப்பியுள்ளோம். இதில் பலரிடம் விசாரித்தால் நாங்கள் சிஎம்டிஏ அப்ரூவலுடன் தான் கட்டியுள்ளோம் எனக் கூறுவார்கள்.






நித்யானந்த் ஜெயராம் எழுப்பியுள்ள கேள்வி போல், மழை நீருக்கு சிஎம்டிஏ ஒப்புதல் எல்லாம் தெரியுமா? ஒவ்வொரு முறை சென்னையில் கனமழை பெய்யும் போதும் தியாகராய நகர், வேளச்சேரி போன்ற பகுதிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இவை முன்பு நீர் வழித்தடங்களாக இருந்தவை என்பதற்கு மீண்டும் மீண்டும் நிரம்பும் நீரே சாட்சி.  


நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அதிகரித்துக் கொண்டே செல்லும் மனிதன் தான் குற்றவாளி. இயற்கை அன்னை ஒவ்வொரு வெள்ளத்தின் போதும் சரியான தீர்ப்பையே எழுதிக் கொண்டிருக்கிறாள்.