தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்றைய தினம் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் பல்வேறு நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டி வருகின்றன. 



 

கடந்த 3 நாட்களாக பெய்த கனமழை காரணமாக சென்னையில் சாலை முழுக்க வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன. அதேபோல் காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் ஏற்கனவே பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் திறக்கப்பட்டன. அதே போல் சேலம் மாவட்ட சுற்று வட்டாரங்களில் பெய்த கனமழையால் இன்று மேட்டூர் அணையும் திறக்கப்பட்டது.



 

சென்னையை பொறுத்தவரை தொடர் கனமழையால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் 384 ஏரிகள் 100% நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கனமழை காரணமாக, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் காஞ்சிபுரத்தில் உள்ள 149 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 187 ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 47 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன. அதேபோன்று சென்னையில் உள்ள ஏரிகள் அனைத்தும் முழுகொள்ளவை ஏடியுள்ளது. ஆகையால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுக்காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே இரவில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 109 ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது .

 

காஞ்சிபுரம் ஏரி நிலவரம்

 

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 336 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 302 ஏரிகள் 70%-100% ,  164 ஏரிகள் 50% - 75% , 103 ஏரிகள் 25% - 50% , 4 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளதாக பொது துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

மதுராந்தகம் ஏரி 

 

மதுராந்தகம் ஏரி அதன் முழு கொள்ளளவான 23.3 அடி, தற்போது  24 அடியாக உயர்ந்துள்ளது. ஏரிக்கு நீர்வரத்து  வினாடிக்கு நேற்று 1000 கன அடியாக இருந்த நிலையில், இன்று 2,000 கன அடியாக உயர்ந்துள்ளது. தற்போது ஏரியில் 720 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது .ஏரிக்கு வரும் உபரிநீர் அனைத்தும் தானேயங்கி ஷட்டர் மற்றும் கலங்கல் வழியாக வெளியேறுகிறது.