செங்கல்பட்டு அருகே திம்மாவரம், வாலாஜாபாத் அருகே அவளூர் ஆகிய பகுதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பரப்புரையில் ஈடுபட்டார் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ். முன்னதாக செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் அன்புமணி ராமதாஸ் வருவதற்காக பரப்புரை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாலை 4 மணி முதலே கூடத் தொடங்கினர். பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் 5.30 மணி அளவில் பிரச்சாரம் நடக்கும் இடத்திற்கு வந்தடைந்தார்.
நான்கு மணியிலிருந்து தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட தொடங்கினாலும், போடப்பட்டிருந்த நாற்காலிகள் அனைத்தும் நிரம்பாமல் இருந்தது. நிரம்பாமல் இருக்கும் நாற்காலி இருந்ததால் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒலிபெருக்கி மூலம் நின்று கொண்டிருப்பவர்கள் அனைவரும் அமருங்கள் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தனர். அவர்கள் அனைவரும் அமர்ந்த பிறகும் கூட 40க்கும் மேற்பட்ட நாற்காலிகள் நிரம்பாமல் இருந்தது.
இதனைப் பார்த்த நிர்வாகிகள் நாற்காலி நிரம்பாமல் இருந்தால் அன்புமணி ராமதாஸ் கடிந்து கொள்வார் என்பதற்கு பயந்த நிர்வாகிகள், உடனடியாக காலியாக இருந்த நாற்காலிகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பிறகு நாற்காலிகள் எடுத்த இடத்தை மறைப்பதற்காக, அங்கிருந்த மற்ற நாற்காலிகளை சமூக இடைவெளியுடன் மாற்றி அமைத்தனர். எடுக்கப்பட்ட நாற்காலிகள் அனைத்தும் அன்புமணி ராமதாஸ் மேடைக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 16 மாவட்ட வார்டு உறுப்பினர்கள் பதிவுகள் உள்ளன அதில் 10 இடங்களில் மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரத்தில் விசாரித்த பொழுது, இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இருப்பதால் வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் வர முடியாத சூழல் காரணமாக அதிக அளவு கூட்டம் கூடவில்லை. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு முன்பாக வந்து இருந்தால், அதிக அளவு கூட்டம் வந்திருக்கும் என தெரிவித்தனர்.
மேடையில் பேசிய அன்புமணி
தமிழ்நாட்டில் திமுக மாநில சுயாட்சி பற்றி பேசுகிறது. ஆனால் தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களை பறிக்காமல் அவர்களுக்கு முழுமையான அதிகாரங்களை அளிக்க வேண்டும். தொண்டர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக இந்த தேர்தலில் நாம் தனித்து போட்டியிடுகிறோம். இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமகவின் பலம் வெளிப்படும்.
தொண்டர்கள் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுங்கள். நீண்ட உழைப்புக்கு பிறகு ஸ்டாலின் முதலமைச்சர் ஆகியுள்ளார். நாமும் நீண்ட காலமாக உழைத்து வருகிறோம். அடுத்து ஆட்சிக்கு வரப்போவது பாமகதான். நீட் தேர்வு மத்திய அரசு பட்டியலில் உள்ளது. மாநில அரசு பட்டியலில் இருந்தால் நாமே சட்டமசோதா மூலம் நீக்கி இருக்க முடியும். மத்திய அரசு பட்டியலில் இருப்பதால் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே, இதுபோல் ஒரு தீர்மானம் நீட் தேர்வை ரத்து செய்ய நிறைவேற்றப்பட்டுள்ளது. தீபாவளி முடிந்து கிராமங்கள் தோறும் தொண்டர்களை சந்திக்க வர உள்ளோம். கட்சியை பல்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே. மணி , வடக்கு மண்டல நிர்வாகி இயக்கிய மூர்த்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.