கடலூர் அருகே உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் உள்ள ரங்காத்தமன் கோவில் தெருவில் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலைய ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் காவல் துறையினர் அந்த பகுதிக்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது ரங்காத்தமன் கோவில் தெருவில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில், பூந்தொட்டியிலும், வீட்டு வாசலிலும் கஞ்சா செடி வளர்த்து வருவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

 



 

உடனடியாக செடிகளை வளர்த்த 2 பேரை பிடித்த காவல் துறையினர் அவர்களை திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும், அங்கே வளர்க்கப்பட்டு வந்த கஞ்சா செடிகளையும் வேருடன் பிடுங்கி கைப்பற்றினர். பின்னர் காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன், விக்னேஸ்வரன் என தெரியவந்தது. மேலும் தொடர்ந்து அவர்களை விசாரணை செய்த பொழுது, அவர்கள் இதனை சில வாரங்களுக்கு முன் தான் வளர்க்க தொடங்கினர் எனவும் மேலும் இதனை ஒரு சோதனை முயற்சியாக வளர்த்து வந்ததாகவும் கூறினர். மேலும் இந்த சோதனையில் நன்றாக வளர்ந்து வந்ததால் இதனை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடலாம் என எண்ணி இருந்துள்ளனர் ஆனால் அப்பொழுது தான் காவல் துறையினரின் சோதனையில் மாட்டிக்கொண்டுதாக தெரிவித்தனர். மேலும் இந்த கஞ்சா செடி வளர்த்ததில் ஒருவரான தப்பி ஓடிய ஜானகிராமன் என்பவரைத் காவல் துறையினர் தேடி வருகின்றனர். 



 

கடலூரில் ஏற்கனவே கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பயத்தை ஏற்படுத்திய நிலையில் தற்பொழுது வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்து வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூர் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சமீப காலங்களாக கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகமாக காணப்படுகிறது, இதனை தடுப்பதற்கு காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் இவ்வாறு தொடர்ந்து பெருகி வரும் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களின் புழக்கங்களை தடுப்பதற்கு காவல் துறையினர் இதற்கென தனிப்படை அமைத்து தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இதுபோல் இனி வரும் காலங்களில் நடக்காமல் இருக்க காவல் துறையினர் நடவடிக்கைகளை தீவிரமாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.