தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்த நாளான இன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படுகிறது. முன்னதாக, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். ’’பெரியார் நடத்திய போராட்டங்கள் யாராலும் காப்பியடிக்க முடியாத போராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துகள்; அவர் பேசிய பேச்சுகள் யாரும் பேச பயப்படும் பேச்சுகள்; அவர் நடந்த நடை யாரும் நடந்திடாதவை; அவர் செய்த பயணங்கள் யாரும் செய்திடாதவை’’ என்று இந்த அறிவிப்பின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
இந்து மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகள், சமத்துவமற்ற தன்மை, பெண்களுக்கு உரிமை மறுப்பு உள்ளிட்டவைகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து எழுதியும் பேசியும் வந்த பெரியாருக்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களுக்கு முன்பு சிலை வைக்கப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பாக வைக்கப்பட்ட பெரியாரின் சிலையின் கீழ் கடவுளை கற்பித்தவன் முட்டாள், கடவுளை வழிபடுகின்றவன் காட்டுமிராண்டி என்ற வாசகங்களும் எழுதப்பட்டு இருக்கும். இதே போல காஞ்சிபுரத்தில் உள்ள சங்கரமடத்தின் முன்பாகவும் பெரியார் சிலையை வைக்க திராவிடர் கழகம் திட்டமிட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சங்கரமடம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு, சில குறிப்பிட்ட அமைப்பினர் மட்டுமே பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்பினர் பெரியார் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த வருடமும் திக, திமுக, அதிமுக, தேமுதிக, மக்கள் மன்றம், விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஏராளமான அமைப்பினர் மரியாதை செலுத்தி வருகின்றனர்